/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச பாரா தடகளத்தில் சென்னை வீரர் சாதனை
/
சர்வதேச பாரா தடகளத்தில் சென்னை வீரர் சாதனை
ADDED : ஜூலை 16, 2025 12:08 AM

சென்னை, சர்வதேச பாரா தடகள போட்டியில், சென்னை வீரர் ரமேஷ் சாதனை படைத்துள்ளார்.
இந்திய பாரா தடகள சங்கம் சார்பில், 7வது சர்வதேச அளவிலான இந்தியா ஓபன் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி, பெங்களூரில் கடந்த 12ம் தேதி நடந்தது.
இதில், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து, வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். நாட்டில் 260க்கும் மேற்பட்ட பாரா தடகள வீரர் - வீராங்கனையர் பங்கேற்று, தங்களது தரவரிசையை அதிகரிக்க போட்டியிட்டனர்.
இதில், ஆடவருக்கான100 மீ., பாரா 'வீல் சேர் ரேஸில்' தமிழகத்தின் ரமேஷ் சண்முகம் போட்டி துாரத்தை 16.30 வினாடியில் கடந்து, தங்கம் வென்று அசத்தினார்.
தொடர்ந்து நடந்த ஆடவருக்கான 400 மீ., பாரா வீல் சேர் ரேஸில், ரமேஷ் சண்முகம் போட்டி துாரத்தை 54.80 வினாடியில் கடந்து, தங்கம் பதக்கமும் கைப்பற்றினார்.
அது மட்டுமல்லாமல், தன் சொந்த சாதனையான 56.56 வினாடியை முறியடித்து, புதிய தேசிய சாதனை படைத்தார்.
மேலும், 800 மீ., வீல் சேர் ரேஸில், ரமேஷ் சண்முகம் போட்டி துாரத்தை, 1 நிமிடம் 56 வினாடி 77 மைக்ரோ வினாடியில் கடந்து, தங்கம் வென்று அசத்தியுள்ளார்.---
முயற்சி இல்லை
இது குறித்து, சென்னை வீரரான ரமேஷ் சண்முகம் கூறியதாவது:
ஒவ்வொரு பாரா வீரர் - வீராங்கனையும் கடினமாக உழைக்க வேண்டும். இங்கு பலரும் கனவு காண்கின்றனர்; ஆனால் முயற்சி எடுக்காமல் விட்டுவிடுகின்றனர்.
என் வாழ்க்கைக்கான பயணத்தில், தினமும் புதிய சாதனை படைக்கப்பட்டு வருகிறது. அது மைதானத்தில் மட்டும் அல்ல; சராசரி வாழ்க்கையிலும் தான்.
சாதனைக்கு சொந்தக்காரராவது எளிய முயற்சி அல்ல; அதற்கு கடின உழைப்பும், பயிற்சியும் வேண்டும். ஒவ்வொரு முறையும் நான் போட்டிக்கு செல்லும்போது, போட்டியை குறித்தோ, போட்டியாளரை குறித்தோ சிந்திப்பது இல்லை.
அதற்கு பதிலாக, என் மீதான தன்னம்பிக்கையை சோதித்து பார்ப்பேன். இந்த போட்டி எனக்கு கடினமாக இருந்தது. கடினமான போட்டியாளர்கள் வருவது, கூடுதல் விறுவிறுப்பை தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.