/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேருந்து நிலையங்களை திறந்து வைத்த முதல்வர்
/
பேருந்து நிலையங்களை திறந்து வைத்த முதல்வர்
ADDED : ஆக 26, 2025 12:20 AM
சென்னை, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கொளத்துார் சட்டசபை தொகுதியில் முடிவுற்ற பணிகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
கொளத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம்., காலனி ஜம்புலிங்கம் பிரதான சாலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 7.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, விளையாட்டு அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின், நேற்று மாலை திறந்து வைத்தார்.
அதேபோல, கொளத்துார் ஜி.கே.எம்.காலனி 24வது ஏ தெருவில் உள்ள பூங்காவில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 86.50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட, பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார்.
மேலும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், பெரியார் நகரில் 12.40 கோடி ரூபாய் செலவில், மறு சீரமைக்கப்பட்ட பெரியார் நகர் அரசு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.
அதுமட்டுமல்லாமல், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, ராஜா தோட்டம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 27.71 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒன்பது மாடிகளை கொண்ட, 162 புதிய குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், திரு.வி.க.நகர் பகுதியில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மறு சீரமைப்பு செய்யப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். மாநகர போக்குவரத்து கழகத்திற்கு முதற்கட்டமாக 104.43 கோடி ரூபாய் மதிப்பில், மகளிருக்கான கூடுதல் பேருந்து இயக்கத்தை கொடியசைத்து துவக்கிவைத்தார்.

