/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடலோர பகுதி கட்டடங்களுக்கு கூடுதல் எப்.எஸ்.ஐ.,: ஐ.ஐ.டி., பரிந்துரைத்தும் சி.எம்.டி.ஏ., மவுனம்
/
கடலோர பகுதி கட்டடங்களுக்கு கூடுதல் எப்.எஸ்.ஐ.,: ஐ.ஐ.டி., பரிந்துரைத்தும் சி.எம்.டி.ஏ., மவுனம்
கடலோர பகுதி கட்டடங்களுக்கு கூடுதல் எப்.எஸ்.ஐ.,: ஐ.ஐ.டி., பரிந்துரைத்தும் சி.எம்.டி.ஏ., மவுனம்
கடலோர பகுதி கட்டடங்களுக்கு கூடுதல் எப்.எஸ்.ஐ.,: ஐ.ஐ.டி., பரிந்துரைத்தும் சி.எம்.டி.ஏ., மவுனம்
UPDATED : ஏப் 22, 2025 07:21 AM
ADDED : ஏப் 22, 2025 12:49 AM

சென்னை: கொட்டிவாக்கம் முதல் மாமல்லபுரம் வரையிலான கடலோர பகுதிகளில், புதிய கட்டடங்களுக்கான எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறியீட்டை அதிகரிப்பதில் ஆய்வுகள் முடிந்தும், அதிகாரிகள் மவுனம் காப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை விதிகள், நிலத்தடி நீர் பாதுகாப்பு என்ற அடிப்படையில், கடலோர பகுதிகளில் கட்டடங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள பல்வேறு பகுதிகளில், நகர்ப்புற வளர்ச்சி வெகுவாக அதிகரித்துள்ளது.
இதனால், இப்பகுதிகளில் கட்டடங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கடந்த, 2008 ல் வெளியிடப்பட்ட இரண்டாவது முழுமை திட்டத்தில், இப்பகுதி கட்டடங்களுக்கு புதிய விதிகள் வகுக்கப்பட்டன.
ஆனால், சாதாரண கட்டடங்களுக்கான தளபரப்பு குறியீடு, 0.75 மடங்காக மட்டுமே இருந்தது. இதனால், இப்பகுதியில் குடியிருப்பு உள்ளிட்ட கட்டுமான திட்டங்களை மேற்கொள்வது தடைபட்டது.
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கட்டடங்களுக்கு குறைந்தபட்ச தளபரப்பு குறியீடு, இரண்டு மடங்காக உள்ளபோது, கடலோர பகுதிகளில் மிக குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது.
கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவற்றில் புதிதாக கட்டுமான திட்டங்கள், மனைப்பிரிவு திட்டங்கள் வரும் நிலையில், விதிகளை தளர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் பொறுப்பு, சென்னை ஐ.ஐ.டி.,யின், 'கியூப்' எனப்படும் ஆய்வு மையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த மையம் ஆய்வு செய்து அறிக்கை அளித்தும், இந்த விவகாரத்தில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்காமல், மவுனமாக உள்ளதாக புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து, நகரமைப்பு வல்லுனர் ஒருவர் கூறியதாவது:
கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஆகிய பகுதிகளில், நிலத்தடி நீர்வளம் பாதிக்காத வகையில், புதிய கட்டுமான திட்டங்களுக்காவன விதிகளை தளர்த்த வேண்டும். இப்பகுதிகளில் தனி நபர் இட தேவை, நீராதார பாதுகாப்பு ஆகிய விஷயங்களை கருத்தில் கொண்டு, மக்கள் குடியேற்றத்தை அதிகரிக்கலாம்.
குறிப்பாக, அதிக மக்கள் இங்கு குடியேறும்போது நிலத்தடி நீர் வள பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். இதன் அடிப்படையில், பல்வேறு வழிமுறைகளை, ஐ.ஐ.டி.,யின் கியூப் மையம் பரிந்துரைத்துள்ளது.
இதன் அடிப்படையில், கட்டடங்களுக்கான தளபரப்பு குறிட்டின் புதிய வரையறையை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும். ஆனால், இது விஷயத்தில் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஓராண்டுக்கும் மேலாக மவுனமாக இருந்து வருகின்றனர்.
இங்கு நிபந்தனைகளுடன் தளபரப்பு குறியீட்டை உயர்த்தினால், விதிமீறல் கட்டுமானங்களை தடுக்க முடியும். இதை அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.