/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை கொட்டியவர்களிடம் அபராதம் வசூல்... ரூ.92.18 லட்சம்! தொடர்ந்து கொட்டினால் வழக்கு பாயும்
/
குப்பை கொட்டியவர்களிடம் அபராதம் வசூல்... ரூ.92.18 லட்சம்! தொடர்ந்து கொட்டினால் வழக்கு பாயும்
குப்பை கொட்டியவர்களிடம் அபராதம் வசூல்... ரூ.92.18 லட்சம்! தொடர்ந்து கொட்டினால் வழக்கு பாயும்
குப்பை கொட்டியவர்களிடம் அபராதம் வசூல்... ரூ.92.18 லட்சம்! தொடர்ந்து கொட்டினால் வழக்கு பாயும்
ADDED : நவ 11, 2024 11:32 PM

சென்னையில் சாலை, நீர்நிலைகள் உள்ளிட்ட பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை, கட்டட கழிவு உள்ளிட்டவை கொட்டியவர்களிடமிருந்து, கடந்த ஒன்றரை மாதங்களில் 92.18 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குப்பை கொட்டுவோர் மீது போலீசில் புகார் அளித்து, வழக்கு பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை மாநகரை துாய்மையாக பராமரிக்கும் வகையில், திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள், 2019ன்படி, பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவு கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, 90 சதவீதம் வீடு, வீடாகச் சென்று மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், குப்பை சேகரித்து வருகின்றனர். கட்டுமான கழிவு கொட்டி வைக்க, மண்டலத்திற்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், அனுமதிக்கப்படாத இடங்களில் குப்பை கொட்டும் பணி தொடர்ந்து வருகிறது. இதை தவிர்க்க, மாநகராட்சியின், 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவி செயற்பொறியாளர், துப்புரவு அலுவலர், துப்புரவு மேற்பார்வையாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்டோர் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இக்குழுவினருக்கு பொது இடங்கள், சாலைகள், காலி மனைகள், நீர்நிலைகளில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க, 15 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர, அந்தந்த மாநகராட்சி பொறியாளர்கள், துப்புரவு மற்றும் சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோரும், பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை கொட்டுவோரிடம் இருந்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.
இதன்படி, கடந்த ஒன்றரை மாதங்களில், 92.18 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், தொடர்ந்து சிலர் மீண்டும் குப்பை கொட்டி வருவதாக கண்டறியப்படுகிறது.
அவ்வாறு குப்பை கொட்டுவோர் மீது அபராதம் விதித்தாலும், பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவித்ததாக போலீசில் புகார் அளித்து, வழக்கு பதிவு செய்ய, மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தொடர்ந்து குப்பை கொட்டுவோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி தலைமை பொறியாளர் சக்தி மணிகண்டன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி குப்பை கொட்டுவோர், அதை எரிப்போர் மீது, 'ஸ்பாட் பைன்' விதிக்கும் டிஜிட்டல் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதை கண்காணிக்க, மண்டலம் வாரியாக சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் மட்டும், 34.23 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, 92.18 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது.
நீர்நிலைகள், காலி மனைகள், சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் குப்பை, கட்டட கழிவு கொட்டுவதை தவிர்த்து, மாநகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -