/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமானத்தில் 'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு அனுமதி மறுப்பு நிறுவனம் ரூ.1.10 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
/
விமானத்தில் 'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு அனுமதி மறுப்பு நிறுவனம் ரூ.1.10 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
விமானத்தில் 'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு அனுமதி மறுப்பு நிறுவனம் ரூ.1.10 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
விமானத்தில் 'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு அனுமதி மறுப்பு நிறுவனம் ரூ.1.10 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
ADDED : அக் 25, 2025 04:56 AM
சென்னை: விமானத்தில் ஏற அனுமதி மறுத்ததால் பாதிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ., நிஜாமுதீனுக்கு, 'கல்ப் ஏர்' விமான நிறுவனம் 1.10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரியமேடைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் எம்.எல்.ஏ., நிஜாமுதீன் தாக்கல் செய்த மனு:
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில், 2023 பிப்., 10ல் நடக்கும் அலுவல் சார்ந்த கூட்டத்தில் பங்கேற்க இருந்தேன்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள 'அக்பர் டிராவல்ஸ்' நிறுவனம், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து துபாய்க்கு செல்லும் கல்ப் ஏர் விமானத்தில், டிக்கெட் முன்பதிவு செய்து வழங்கியது.
பாஸ்போர்ட்டில், 'நிஜாமுதீன்' என்ற ஒற்றை பெயர் இருப்பதாக கூறி, மாஸ்கோ விமான நிலையத்தில், விமான நிறுவன ஊழியர்கள் தன்னை விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை.
மூத்த அதிகாரிகளிடம் புகார் அளித்து, ஒன்றரை மணி நேரம் காத்திருந்தும் பயனில்லை. வேறு வழியின்றி, மற்றொரு விமான நிறுவனத்தை தேர்வு செய்து, பயணத்தை தொடர்ந்தேன்.
கவனக்குறைவு மற்றும் சேவை குறைபாடுடன் நடந்த விமான நிறுவனத்தால், தான் மிகுந்த கஷ்டங்களை எதிர்கொண்டேன்.
எனவே, டிக்கெட் கட்டணம் 30,935 ரூபாயை, 9 சதவீத வட்டியுடன் வழங்கவும், சேவை குறைபாடுக்கு 7 லட்சம் ரூபாய், மன உளைச்சலுக்கு 5.5 லட்சம் ரூபாய், வழக்கு செலவுக்கு 50,000 ரூபாய் வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
புகார்தாரர் இந்தியாவில் இருந்து மாஸ்கோவுக்கு, அதே பெயர், பயண ஆவணங்கள் வாயிலாகவே வந்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பழைய விதிகளின்படி, பயண ஆவணத்தில் இரண்டு பெயர் இருக்க வேண்டும்.
பின், பாஸ்போர்ட்டில் ஒரு பெயர், விசாவின் இரண்டாம் பக்கத்தில் தந்தை அல்லது குடும்ப பெயர் குறிப்பிட்டிருந்தால், பயணியை அனுமதிக்கலாம் என விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.
திருத்த அறிவிப்பை பின்பற்றாமல், சேவை குறைபாடுடன் விமான நிறுவனம், அதன் ஊழியர்கள் நடந்துள்ளனர்.
எனவே, விமான டிக்கெட் கட்டணத்தை 9 சதவீத வட்டியுடனும், சேவை குறைபாடுக்கு 1 லட்சம் ரூபாய்; வழக்கு செலவாக 10,000 ரூபாய் என, மொத்தம் 1.10 லட்சம் ரூபாயை இரண்டு மாதத்தில் விமான நிறுவனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

