sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சதுப்பு நிலத்தை ஒட்டிய 16 கிராமங்களில் கட்டுமானத்திற்கு...தடை: விதிமீறலை அங்கீகரிக்க அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

/

சதுப்பு நிலத்தை ஒட்டிய 16 கிராமங்களில் கட்டுமானத்திற்கு...தடை: விதிமீறலை அங்கீகரிக்க அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

சதுப்பு நிலத்தை ஒட்டிய 16 கிராமங்களில் கட்டுமானத்திற்கு...தடை: விதிமீறலை அங்கீகரிக்க அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

சதுப்பு நிலத்தை ஒட்டிய 16 கிராமங்களில் கட்டுமானத்திற்கு...தடை: விதிமீறலை அங்கீகரிக்க அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு


ADDED : அக் 13, 2025 04:55 AM

Google News

ADDED : அக் 13, 2025 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பசுமை தீர்ப்பாய உத்தரவையடுத்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தன்மையை பாதுகாக்கும் வகையில், 16 கிராமங்களில் 1 கி.மீ., வரை, கட்டுமான பணிகளுக்கு சி.எம்.டி.ஏ., தடை விதித்துள்ளது. அதேநேரம், பிரச்னைக்கு தீர்வு காண்பதாக கூறி, 1 கி.மீ., என்ற கட்டுப்பாட்டை குறைத்து, விதிமீறல்கள் தொடர, அரசின் உயர் அதிகாரிகள் முயற்சிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை மேடவாக்கம் முதல் பெரும்பாக்கம் வரை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பரவியுள்ளது. தென்சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்படாமல் இருக்கவும், கடல்நீர், நிலத்தடி நீருடன் கலக்காமல் இருக்கவும், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உதவுகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டிய பகுதிகளில் குடியிருப்புகள், அடுக்குமாடி வணிக மற்றும் அலுவலக வளாகங்கள் அதிகமாக வந்துள்ளன.

மழைநீரை உள்வாங்கி, அதை நிறுத்திவைத்து கடலுக்கு அனுப்பும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியல் தன்மை பாதிக்கப்படும் அளவுக்கு கட்டுமான திட்டங்கள் அதிகரித்துள்ளன.

என்ன காரணம்? சமீபத்தில், கட்டுமான திட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், சதுப்பு நிலத்திலும், அதையொட்டி 1 கி.மீ., சுற்றளவுக்குள்ளும் கட்டுமான அனுமதிக்கு தடை விதித்துள்ளது.

பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவு அடிப்படையில், இங்கு கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதை சி.எம்.டி.ஏ.,வும் நிறுத்திவிட்டது. இதனால், உள்ளாட்சி அமைப்புகளும் கட்டட அனுமதியை நிறுத்த முடிவு செய்துள்ளன.

இதனால், வேளச்சேரி, பெருங்குடி, சீவரம், ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், குளத்துார், பள்ளிக்கரணை, ஜல்லடியன்பேட்டை, பெரும்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார், தரமணி ஆகிய 16 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட, 1,300 சர்வே எண்களில், கட்டுமான பணிகள் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இங்கு நிலம் வாங்கியவர்கள், எதிர்காலத்தில் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை, 'ராம்சார்' தளமாக அறிவித்த நிலையில், அதன் பிரதான பகுதி, வெளிச்சுற்று பகுதிகளை வரையறை செய்ய வேண்டும். அவ்வாறு வரையறை செய்தால் மட்டுமே, தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

இதுகுறித்து, சூழலியல் ஆர்வலர்கள் கூறியதாவது:

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சூழலியல் தன்மையை கருத்தில் கொள்ளாமல், நில வகைப்பாடு மாற்றம் என்ற பெயரில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கட்டட அனுமதி வழங்கியதே தற்போதைய பிரச்னைக்கு காரணம்.

இந்த விவகாரத்தில் தற்போது பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவை முறையாக செயல்படுத்த வேண்டும்.

சதுப்பு நிலத்தை சுற்றிய 1 கி.மீ., சுற்றளவுள்ள கட்டுமான தடையை, 500 மீட்டர் என்ற அளவில் குறைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கட்டட அனுமதிக்கான தடையை நீக்குவது என்ற அடிப்படையில் மட்டும் பார்க்காமல், சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்கும் நோக்கிலும் இதை அணுக வேண்டும்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு உட்பட்ட சர்வே எண்களில், விற்பனை பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகைளுக்கு ஏற்கனவே உயர் நீதிமன்ற தடை உள்ளது. இந்நிலையில், பசுமை தீர்ப்பாய உத்தரவை முறையாக செயல்படுத்தவும், சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் வகையிலும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரிகள் நடவடிக்கை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'பசுமை தீர்ப்பாய உத்தரவால், பள்ளிக்கரணையில் கட்டட அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். தலைமை செயலர் மற்றும் பல்வேறு துறைகளுடன் ஆலோசித்து, இதற்கு தீர்வு காணப்படும்' என்றார்.

தெளிவுபடுத்துவது அரசின் பொறுப்பு சூழலியல் ரீதியாக சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம், 20 ஆண்டுகளாக குடியிருப்புகள் அதிகரித்துள்ள நிலையில், திடீரென தடை விதிப்பது, மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. குழப்பங்களை தெளிவுபடுத்த வேண்டியது அரசின் பொறுப்பு. அதிகாரிகள் இதற்கான வழியை காண வேண்டும். - பி.மணிசங்கர், தமிழக பிரிவு துணை தலைவர், தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சில்


- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us