/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர், கழிவுநீர் பிரச்னைக்கு நுகர்வோர்... அலைக்கழிப்பு! வார்டு மறுவரையறையில் தீராத குழப்பம்
/
குடிநீர், கழிவுநீர் பிரச்னைக்கு நுகர்வோர்... அலைக்கழிப்பு! வார்டு மறுவரையறையில் தீராத குழப்பம்
குடிநீர், கழிவுநீர் பிரச்னைக்கு நுகர்வோர்... அலைக்கழிப்பு! வார்டு மறுவரையறையில் தீராத குழப்பம்
குடிநீர், கழிவுநீர் பிரச்னைக்கு நுகர்வோர்... அலைக்கழிப்பு! வார்டு மறுவரையறையில் தீராத குழப்பம்
ADDED : நவ 14, 2024 11:50 PM

வார்டு மறுவரையறை நடைமுறைக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும், புதிய வார்டு எண்கள் அடிப்படையில், குடிநீர் வாரியத்தின் 'ஆன்லைன்' புகார் பிரிவில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், மழைக்காலத்தில் குடிநீர், கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு தேடும் நுகர்வோருக்கு, உரிய நிவாரணம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், 200 வார்டுகள் உள்ளன. இதில், 167வது வார்டு, 12வது மண்டலமான, ஆலந்துாரில் முடிகிறது. அடுத்த, 168வது வார்டு, 13வது மண்டலமான அடையாறில் துவங்க வேண்டும்.
ஆனால், 2011ம் ஆண்டு, விரிவாக்கத்தின்போது, கடைசி நேரத்தில், உள்ளகரம் - புழுதிவாக்கம் நகராட்சி, மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டது.
இதனால் ஏற்பட்ட நிர்வாக குளறுபடியால், 168, 169 ஆகிய வார்டுகள், 14வது மண்டலமான பெருங்குடியில் இடைச்செருகலாக சேர்க்கப்பட்டன. இதன்படி, 2011ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரை, அடையாறு மண்டலத்தில், 170 முதல் 182 வரை உள்ள வார்டுகளாக செயல்பட்டன.
சிக்கல்
வார்டு மறுவரையறைக்குபின், உள்ளாட்சி தேர்தலில் இருந்து, பெருங்குடி மண்டலத்தில் உள்ள, 168, 169 ஆகிய வார்டு எண்களை, அடையாறில் சேர்த்து, 168 முதல் 180 வரை என மாற்றப்பட்டது. அடையாறு மண்டலத்தில் இருந்த, 181, 182 ஆகிய வார்டு எண்கள், பெருங்குடி மண்டலத்திற்கு மாற்றப்பட்டது.
இதனால், அடையாறு மண்டலத்தில் பழைய வார்டு எண்களைவிட, இரண்டு எண்கள் மாறி வரும். பெருங்குடி மண்டலத்தில், ஆறு வார்டுகளில் எண்கள் மாறுபடும்.
அதேபோல், கோடம்பாக்கம் மண்டலத்தில், 16 வார்டுகள் உள்ளன. இதில், 131, 132, 133, 135, 136 ஆகிய பழைய வார்டு எண்கள் மாற்றப்பட்டன.
மேலும், சோழிங்கநல்லுார் மண்டலத்தில், இ.சி.ஆர்., ---- ஓ.எம்.ஆரில் பிரித்த வார்டுகளில் நிர்வாக குளறுபடி ஏற்பட்டதால், அங்குள்ள, 194, 195, 196, 197, 198, 199 ஆகிய பழைய வார்டு எண்கள் மாற்றப்பட்டன.
அதேபோல், 2018ம் ஆண்டு, வார்டு மறுவரையறையின் கீழ், 200 வார்டுகளில் இருந்தும், 10 முதல் 20 சதவீத பகுதிகள் அடுத்தடுத்த வார்டுகளில் சேர்க்கப்பட்டன.
வார்டுகள் மாறிய எண்களை அடிப்படையாக கொண்டு, கவுன்சிலர்கள், மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய பொறியாளர்கள், சுகாதார அதிகாரிகளின் மொபைல் எண்கள் உள்ளன. இது குறித்து தகவலை, பொதுமக்களுக்கு முறையாக இன்னும் கொண்டு சேர்க்கவில்லை.
புதிய வார்டு எண்கள் அடிப்படையில், நுகர்வோருக்கான மாநகராட்சி, குடிநீர், கழிவுநீர் வரி எண்களும் மாற்றப்பட்டன. மாநகராட்சி இணையதளத்தில், பொதுமக்கள் புகார் மனு பதிவு செய்வதில் எந்த சிக்கலும் இல்லை.
ஆனால், குடிநீர் வாரிய இணையதளத்தில், புகார் மனு அனுப்பும் பிரிவில், 2022ம் ஆண்டு முந்தைய வார்டு எண்கள் அடிப்படையில் விபரங்கள் உள்ளன.
தீர்வு எப்போது?
இதனால், வரி ரசீதுகளில் உள்ள புதிய எண் அடிப்படையில், புகார் மனு பதிவு செய்தால், அது பழைய வார்டுக்கு செல்கிறது.
குறிப்பாக, அடையாறு மண்டலம், 168வது வார்டு பிரச்னைக்கு புகார் அளித்தால், அவை பெருங்குடி மண்டலம், 185வது வார்டு அதிகாரிக்கு செல்கிறது.
அதேபோல், 135வது வார்டு அசோக் நகர் பகுதி பிரச்னைக்கு புகார் அளித்தால், 132வது வார்டு, கோடம்பாக்கம் பகுதி அதிகாரிக்கு செல்கிறது.
மேலும், 197ம் வார்டு இ.சி.ஆர்., பகுதி பிரச்னைக்கு புகார் அளித்தால், 199வது வார்டு, ஓ.எம்.ஆர்., பகுதி அதிகாரிக்கு செல்கிறது.
இதனால், குடிநீர், கழிவுநீர் பிரச்னைக்கு, அவசர நடவடிக்கை தேவை என புகார் அளித்தால், அவை மண்டலம், வார்டு மாறி வருவதற்குள் பிரச்னையின் வீரியம் அதிகரித்து, மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.
கடந்த ஆண்டு 'மிக்ஜாம்' புயலின்போது, குடிநீர் தேவை, கழிவுநீர் பிரச்னைக்கு அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, உரிய நேரத்தில் தீர்வு கிடைக்காமல், மழையால் பாதித்த மக்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.
அதுபோன்ற பிரச்னை இந்த பருவமழைக்கும் ஏற்படும் என்ற அச்சம், பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது:
வார்டு எண் மாறிய பகுதிகளில், குடிநீரில் கழிவுநீர் கலப்பு, குழாய் உடைப்பு, கழிவுநீர் வெளியேற்றம், வரி விதிப்பில் சந்தேகம் தொடர்பாக, புதிய வார்டு எண் அடிப்படையில் மொபைல் போனில் தொடர்பு கொண்டால், 2022ம் ஆண்டுக்கு முன் இருந்த வார்டு எண்களில், மொபைல் எண் வைத்திருக்கும் அதிகாரிக்கு செல்கிறது.
அவர்களும், உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு மாற்றி அனுப்புவதில்லை. உரிய பதிலும் எங்களுக்கு தருவதில்லை. இதனால், உரிய தீர்வு கிடைக்காமல் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிறோம்.
மிக்ஜாம் புயல் பாதிப்பைபோல், இந்த பருவமழைக்கும் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாமல் சிரமப்பட போகிறோம்.
மேலாண்மை இயக்குனர் தலையிட்டு, இரண்டரை ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமும் 800க்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன. இதில், 95 சதவீதம் கழிவுநீர் பிரச்னை புகார்கள். மழைக்காலங்களில், 1,500க்கும் மேற்பட்ட புகார்கள் வரும். புதிய வார்டு எண்கள் அடிப்படையில் புகார் தெரிவிக்கும் வகையில், 'ஆன்லைன்' புகார் பிரிவை மாற்றவில்லை. தொழில்நுட்பத்தில் மாற்ற வேண்டிய சிறிய பணி தான். ஏன் மாற்றவில்லை என்பது தெரியவில்லை.
- குடிநீர் வாரிய அதிகாரிகள்
- நமது நிருபர் -