/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அவசரகதியில் பூங்கா பணி துவங்கியதால் சர்ச்சை
/
அவசரகதியில் பூங்கா பணி துவங்கியதால் சர்ச்சை
ADDED : நவ 10, 2025 01:30 AM
சென்னை: ஆலோசனை வழங்கும் நிறுவனம் குறித்த விவரங்களை வெளியிடாமல், கிண்டி புதிய பூங்காவில் செடிகள், மரக்கன்றுகள் நடும் பணியை, அவசர கதியில் தோட்டக்கலைத்துறை துவங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கிண்டியில் ரேஸ்கோர்ஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட, 118 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட பூங்கா அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி வாயிலாக குளங்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வந்தன.
நீதிமன்ற வழக்கால் பூங்கா பணிகள் துவக்கப்படவில்லை. ஆனால், பூங்காவை எப்படி அமைக்க வேண்டும்; அதில் என்னென்ன வசதிகள் வேண்டும் என முடிவு செய்ய, கலந்தாலோசனை நிறுவனத்தை நியமிக்க தோட்டக்கலைத்துறை முடிவு செய்தது. இதற்கான டெண்டர், ஜூன் 22ல் வெளியிடப்பட்டது.
மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்படும் என, அதிகாரிகள் மூன்று மாதங்களாக கூறி வந்தனர்.
பணிகளை தொடர நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, அவசர கதியில், செடிகள், மரக்கன்றுகள் நடும் பணியை தோட்டக்கலைத்துறை துவங்கியுள்ளது.
சமீபத்தில், இப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். பணிகளில் வெளிப்படைத் தன்மை இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தோட்டக்கலைத்துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
தனியார் நிலங்கள், வீடுகள் போன்ற இடங்களில், பூங்கா அமைப்பதற்கு ஆலோசனை வழங்க, தோட்டக்கலைத்துறையில் தனிப்பிரிவு உள்ளது. இதில், அனுபவம் பெற்ற அதிகாரிகள் உள்ளனர்.
ஆனால், கிண்டி பூங்கா அமைக்கும் பணிக்கு ஆலோசனை வழங்க, தனியாக நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அது தகுதியான நிறுவனமா என்ற விவரத்தைக்கூட அரசு தெரிவிக்கவில்லை.
ஆலோசனை நிறுவனத்திற்கு அளிக்கும் நிதியில், பூங்காவில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி இருக்கலாம்.
இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தோட்டக்கலைத்துறையின் பூங்கா பிரிவு அதிகாரியிடம் கேட்டபோது, 'ஆலோசனை நிறுவனம் தேர்வு, நிதி ஒதுக்கீடு குறித்த விபரம் விரைவில் அறிவிக்கப்படும்' என்றார்.

