/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ.சி.ஆரில் வாகன நிறுத்துமிடங்கள் 'கும்டா'விடமிருந்து பறிக்குது ஆணையம்
/
இ.சி.ஆரில் வாகன நிறுத்துமிடங்கள் 'கும்டா'விடமிருந்து பறிக்குது ஆணையம்
இ.சி.ஆரில் வாகன நிறுத்துமிடங்கள் 'கும்டா'விடமிருந்து பறிக்குது ஆணையம்
இ.சி.ஆரில் வாகன நிறுத்துமிடங்கள் 'கும்டா'விடமிருந்து பறிக்குது ஆணையம்
ADDED : நவ 10, 2025 01:32 AM
சென்னை: இ.சி.ஆர்., எனப்படும் கிழக்கு கடற்கரை சாலையில், இரண்டு இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் திட்டத்தை, ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமமான, 'கும்டா'விடம் இருந்து, மாநில நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளது.
அதற்கேற்ப, ஏற்கனவே வழங்கிய ஒப்பந்தத்தை, கும்டா ரத்து செய்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்துவதில், ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, 'கும்டா' எனப்படும் போக்குவரத்து குழுமம் ஏற்படுத்தப்பட்டது.
ஒன்றுக்கு மேற்பட்ட போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும்போது ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, இக்குழுமம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த வகையில் கிழக்கு கடற்கரை சாலையில், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதியை ஏற்படுத்த, கடந்த ஆகஸ்டில், தலைமை செயலர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, இ.சி.ஆர்., சாலையில் செல்லும் வாகனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தும் பணிகளை, 'கல்பதரு டெக்னாலஜிஸ்' என்ற நிறுவனத்திடம் கும்டா ஒப்படைத்தது.
இதற்கான பணி ஆணை, செப்., 10ல் கல்பதரு நிறுவனத்திடம் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் கணக்கெடுப்பில் ஈடுபடவில்லை.
நான்கு முறை எச்சரித்தும் கணக்கெடுப்பு பணியை துவக்காததால், கல்பதரு நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை, கும்டா ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழக மாநில நெடுஞ்சாலை ஆணையம், கும்டாவுக்கு அனுப்பிய கடிதம்:
இ.சி.ஆர்., சாலையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் திட்டத்துக்கு, கும்டா அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ஈஞ்சம்பாக்கத்தில், ஒரு இடத்தில், 38,976 சதுர அடியும், இன்னொரு இடத்தில், 14,423 சதுர அடியும் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
எவ்வித வில்லங்கமும் இல்லாத வகையில் சரி பார்த்து, இந்த நிலங்களை எங்களிடம் விரைவாக ஒப்படையுங்கள். அந்த இடங்களில், வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகளை நாங்களே மேற்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அண்ணா நகர், 'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டம் கும்டாவிடம் இருந்து மாநகராட்சிக்கு சென்றது. அதே போல் தற்போது, இ.சி.ஆர்., வாகன நிறுத்துமிடம் அமைக்கும் திட்டம் நெடுஞ்சாலை துறைக்கு கைமாற உள்ளது.
இதுகுறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசு நிறுவனங்களில் எந்த பணியானாலும், கால அவகாசத்துடன் அறிவிப்பு வெளியிட்டு, அதன் அடிப்படையிலேயே ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
ஆனால், கும்டாவில் உள்ள அதிகாரிகள், தனியார் நிறுவனம் போன்று முறையான அறிவிப்பு இன்றி, ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்வது, ஒப்பந்த முறையில் வல்லுனர்களை நியமிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இதனால்தான், தற்போதைய பிரச்னையும் எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

