/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பால் பண்ணைக்கு 4 வாரத்திற்குள் மாற்று இடம் தர மாநகராட்சிக்கு 'கெடு'
/
பால் பண்ணைக்கு 4 வாரத்திற்குள் மாற்று இடம் தர மாநகராட்சிக்கு 'கெடு'
பால் பண்ணைக்கு 4 வாரத்திற்குள் மாற்று இடம் தர மாநகராட்சிக்கு 'கெடு'
பால் பண்ணைக்கு 4 வாரத்திற்குள் மாற்று இடம் தர மாநகராட்சிக்கு 'கெடு'
ADDED : ஆக 28, 2025 12:23 AM
சென்னை, அடையாறு எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரி வளாகத்தில் செயல்படும் கால்நடை பண்ணைக்கு, நான்கு வாரங்களுக்குள் மாற்று இடம் வழங்க, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
டாக்டர் எம்.ஜி.ஆர்., ஜானகி கலை அறிவியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
அடையாறு எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரி வளாகத்தில், 50க்கும் அதிகமான கால்நடைகளுடன், சட்டவிரோதமாக பால் பண்ணை செயல்பட்டு வருகிறது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை மீறி, இந்த பண்ணை செயல்படுகிறது. பண்ணை கழிவுகள் அடையாற்றிலும், கிணற்றிலும் விடப்படுவதால், நிலத்தடி நீர் மாசுபடுகிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
கூரை வேயப்பட்டுள்ள கட்டடத்தில் பண்ணை செயல்படுவதால், தீ விபத்து ஏற்படும் ஆபத்தும் உள்ளது. எனவே, கால்நடை பண்ணையை அகற்ற, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை விசாரித்த தீர்ப்பாயம், கால்நடை பண்ணயை அகற்ற உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சந்திரா என்பவர் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரி வளாகத்திலிருந்து, கால்நடை பண்ணையை அகற்றும் உத்தரவில் தலையிட விரும்பவில்லை. முறையான கொட்டகை வசதி இல்லாத கால்நடைகளுக்கு, இடமளிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
எனவே, எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரியில் உள்ள கால்நடை பண்ணைக்கு, மாற்று இடத்தை உறுதி செய்ய வேண்டும். இதற்காக, மனுதாரரும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும், சென்னை மாநகராட்சியை அணுக வேண்டும்.
நான்கு வாரங்களுக்குள் மாற்று இடத்தை அமைத்து தர, சென்னை மாநகராட்சி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் அக்டோபர் 13ல் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.