/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ, டாக்ஸிகளுக்கு அரசு செயலி உருவாக்குவது... இழுபறி! முத்தரப்பு பேச்சில் முடிவு கிட்டாததால் அதிருப்தி
/
ஆட்டோ, டாக்ஸிகளுக்கு அரசு செயலி உருவாக்குவது... இழுபறி! முத்தரப்பு பேச்சில் முடிவு கிட்டாததால் அதிருப்தி
ஆட்டோ, டாக்ஸிகளுக்கு அரசு செயலி உருவாக்குவது... இழுபறி! முத்தரப்பு பேச்சில் முடிவு கிட்டாததால் அதிருப்தி
ஆட்டோ, டாக்ஸிகளுக்கு அரசு செயலி உருவாக்குவது... இழுபறி! முத்தரப்பு பேச்சில் முடிவு கிட்டாததால் அதிருப்தி
ADDED : மார் 06, 2024 12:20 AM

சென்னை ;பொது போக்குவரத்தான ஆட்டோ மற்றும் டாக்ஸிகளுக்கான செயலியை கொண்டு வருவதில், தமிழக அரசு 10 ஆண்டுகளாக இழுத்தடிப்பதால், வாடகை வாகன ஓட்டுனர்கள் மட்டுமின்றி பயணியரும் அதிருப்தியடைந்துள்ளனர். ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு, அதிகாரிகள் தலைமையிலான முத்தரப்பு பேச்சில் முடிவு எட்டப்படாததால், தொழிற்சங்கத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னை, புறநகரில் ஆட்டோக்களின் சேவை மிக முக்கியமானதாக இருக்கிறது. இப்பகுதிகளில் ஓடும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு, 2013ம் ஆண்டு 1.8 கி.மீ., துாரத்திற்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா 12 ரூபாய் காத்திருப்பு கட்டணம், ஐந்து நிமிடத்துக்கு 3.50 ரூபாய், இரவு நேரத்தில் இரட்டிப்பாக வசூலிக்க அனுமதித்து, போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்த கட்டணத்தை மாற்றியமைத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனினும் அரசு அறிவித்தபடி, டிஜிட்டல் மீட்டர் வழங்கவில்லை. மேலும், எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய, கமிட்டியும் அமைக்கவில்லை.
கூடுதல் கட்டணம்
எரிபொருள் மற்றும் வாகன உதிரி பொருட்களின் விலை உயர்வு காரணமாக, சில ஆண்டுகளாக ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனால், ஆட்டோக்களில் பயணம் செய்வோரிடம் மீண்டும் பேரம் பேசி கட்டணத்தை வசூலிக்கின்றனர். பெரும்பாலான இடங்களில், குறைந்த கி.மீ., செல்ல ஆரம்ப கட்டணமே 100 ரூபாய் வசூலிக்கப்படுவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தனியார் நிறுவனங்கள் வாயிலாக அறிமுகமான செயலிகளிலும், நுகர்வோர் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.
முன்பதிவு செய்யும் ஆட்டோக்கள், திடீரென பயணத்தை ரத்து செய்வது; கூடுதல் கட்டணம் கேட்டு பேரம் செய்வது போன்ற பிரச்னைகளால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. இதற்கிடையே, 'ஆட்டோ பயணத்திற்கான கட்டணத்தை அரசு மாற்றியமைக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்களுக்கு இணையாக, வாடகை ஆட்டோக்களுக்கான பிரத்யேக செயலியை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்' என, ஆட்டோ தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஆனாலும், இதுவரை தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில், ஆட்டோவுக்கான முன்பதிவு செயலியை அரசு சார்பில் துவங்காமல், 'டாக்சினா' என்னும் தனியார் நிறுவனத்துடன், அரசு முத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அத்துடன், ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், பயணியருக்கும் பாதிப்பு ஏற்படாமல் கண்காணிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதையொட்டி, முத்தரப்பு ஒப்பந்த வரைவு தயார் செய்து, அதன் மீது கருத்து கூற தொழிற்சங்கத்தினருக்கு போக்குவரத்து ஆணையர் அழைப்பு கடிதம் அனுப்பியிருந்தார்.
பேச்சு
இதைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் நேற்று முத்தரப்பு பேச்சு நடந்தது.
போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம், கூடுதல் ஆணையர் மணக்குமார், அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு செயலர் பாலசுப்ரமணியம் தலைமையிலான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்ததாவது:
ஆட்டோ செயலி என்பது முழுதும் ஆட்டோவுக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும். செயலிக்கான நிதி மூலதனத்தை, ஓட்டுனர் நல வாரியத்தில் இருந்து பெற்றால், அது அரசே துவங்குவதாக அமையும்.
செயலியில், அரசு சின்னத்தை வர்த்தக முத்திரையாக வெளியிட வேண்டும். ஆட்டோ செயலி பணிக்கு, பொது ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும்.
பயணியரிடம் ஒரு சவாரிக்கு 15 ரூபாய், பயன்பாட்டு கட்டணம் பெற்று, அதில் கிடைக்கும் லாபத்தில் மூன்றில் ஒரு பங்கு ஓட்டுனர்களின் நலனுக்கு பயன்படுத்த வேண்டும். உயர்த்தப்பட்ட மீட்டர் கட்டணத்தை உள்ளடக்கிய ஆட்டோ செயலியை, அரசே துவங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தனர்.
இது குறித்து, போக்குவரத்து ஆணையர் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
போக்குவரத்து ஆணையரகத்தால் தனியாக செயலியை இயக்க முடியாது. புதிய செயலி உருவாக்கி, எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க, முத்தரப்பு பேச்சு நடத்தினோம். ஆட்டோ தொழிலாளர்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அதன் விபரம், அடுத்த வாரம் நடக்கும் முத்தரப்பு பேச்சில் தெரிவிப்போம்.
ஆட்டோ தொழிலாளர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், புதிய செயலி விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், மாநில அரசு கட்டணத்தை உயர்த்தாமல் உள்ளது. வேறு வழியில்லாமல், ஆட்டோ தொழிலாளர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால், பொதுமக்களிடத்தில் ஓட்டுனர்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. மற்றொருபுறம், தனியார் செயலி வாயிலாக ஆட்டோ முன்பதிவு செய்து இயக்கும்போது, 100 ரூபாய்க்கு, 30 ரூபாய் கமிஷன் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பயணியர் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஆட்டோக்களுக்கான செயலியை அரசே துவங்கி, நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.
- பாலசுப்ரமணியம்,
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்
சம்மேளனத்தின் செயல் தலைவர்
சென்னை போன்ற நகரங்களில் ஆட்டோ பயணம் அத்தியாவசியமாகி உள்ளது. குறிப்பாக, பெண்கள், முதியோர் ஆட்டோக்களில் அதிகளவில் பயணம் செய்கின்றனர். அரசு நிர்ணயித்த ஆட்டோ கட்டணத்தைவிட, ஓட்டுனர்கள் அதிகமாக வசூலிக்கின்றனர். திடீரென பேருந்து சேவை குறைப்பு, கனமழை போன்ற நேரங்களில், இந்த கட்டணத்தை பல மடங்கு உயர்த்துகின்றனர். நியாயமான கட்டணத்தை வசூலிக்க, அரசே பிரத்யேக செயலியை துவக்குவது நல்ல யோசனை தான்.
- பயணியர்

