ADDED : அக் 21, 2026 04:57 AM

மாணவியிடம் அத்துமீறிய இருவருக்கு ‘காப்பு’
சேலையூர்: மாடம்பாக்கத்தைச் சேர்ந்த 18 வயது கல்லுாரி மாணவி, இரு நாட்களுக்கு முன் வீட்டருகே நடந்து சென்றபோது, அவ்வழியாக ஆட்டோவில் வந்த இருவர், மாணவியை கிண்டல் செய்ததுடன், கையை பிடித்து இழுத்து அநாகரிகமாக நடந்து கொண்டனர். இது குறித்து விசாரித்த சேலையூர் போலீசார், காமராஜபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய், 32, எலக்ட்ரீஷியன் யுவராஜ், 26, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
திருநங்கையுடன் கணவர் தொடர்பு: மனைவி தற்கொலை
நீலாங்கரை: ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரைச் சேர்ந்த தம்பதி ராஜேஷ், 46 – ரதி, 43. சில ஆண்டுகளுக்கு முன் எண்ணுாரில் வசித்தபோது ராஜேஷுக்கும் திருநங்கை ஒருவருக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் ஈஞ்சம்பாக்கத்தில் வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்த பின்னும், ராஜேஷ் திருநங்கையுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரதி, நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
மாநகர பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் சிக்கினார்
ஆலந்துார்: சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் வடிவேலன், 49; மாநகர பேருந்து ஓட்டுநர். கடந்த 18ம் தேதி இரவு, கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி பேருந்தை ஓட்டி சென்றார். ஆலந்துார், ஜி.எஸ்.டி., சாலையில் முன்னால் சென்ற ஆட்டோ ஓட்டுநர் வழிவிடாததால், வடிவேலன் தொடர்ந்து ‘ஹாரன்’ அடித்தார். ஆட்டோ ஓட்டுநர் சிமென்ட் சாலை சந்திப்பு அருகே நிறுத்தி தகராறில் ஈடுபட்டு, வடிவேலனை தாக்கி தப்பினார். பரங்கிமலை போலீசார் விசாரித்து, கானாத்துாரை சேர்ந்த வேல்முருகன், 21, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
காலி நிலத்தில் கஞ்சா செடி: போலீசார் விசாரணை
பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில், சென்னை — பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள காலி நிலத்தில், 2 அடி உயர கஞ்சா செடி வளர்ந்திருந்தது. தகவலறிந்த நசரத்பேட்டை போலீசார், நேற்று சம்பவ இடத்துக்குச் சென்று செடியை பிடுங்கி அப்புறப்படுத்தினர். செடியை மர்ம நபர்கள் நட்டு வளர்த்தனரா அல்லது வேறு வகையில் அங்கு முளைத்ததா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
