ADDED : ஆக 09, 2026 12:59 AM
வாலிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல்
எம்.ஜி.ஆர்., நகர்: கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த யூ - டியூப் தளத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருபவர் பாலசந்திரன், 27. கே.கே.நகர் காசி தியேட்டர் அருகே, கடந்த 5ம் தேதி இரவு நடந்து சென்ற பாலசந்திரனை, மர்ம நபர்கள் காரில் கடத்தினர். வந்தவாசி அருகே அறையில் அடைத்து, 2 லட்சம் ரூபாய் கேட்டு தாக்கினர்.
பணம் தருவதாக கூறி அங்கிருந்து நேற்று, காரில் கிளம்பியபோது அவர்களிடம் இருந்து தப்பித்து, பூக்கடை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இதையடுத்து வழக்கு எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மர்ம மரணம்
கொடுங்கையூர்: கொடுங்கையூர், செல்வ விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் கிஷோர், 25; சென்னை மாநகராட்சி ஒப்பந்த பணியாளர். இவருக்கு மனைவி பூஜிதா, 22, ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.
கொருக்குபேட்டை, மீனம்பாள் நகர் சாலையில் நேற்று, சுயநினைவை இழந்து படுத்து கிடந்த கிஷோரை, அவரது நண்பர்கள் துாக்கி, ஆட்டோ மூலம் வீட்டில் சேர்த்தனர். அங்கிருந்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது. கொடுங்கையூர் போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிந்து, விசாரித்து விசாரிக்கின்றனர்.
துாய்மை பணியாளரை தாக்கியவர் மீது வழக்கு
கொரட்டூர்: பாடியில், இம்மாதம் 6ம் தேதி துாய்மை பணியில் ஈடுபட்டிருந்த காது கேளாத மாற்றுத்திறனாளி மாநகராட்சி ஊழியர் முருகன், 45, என்பவரிடம், குப்பை அகற்றாதது குறித்து, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ரமேஷ், 61, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், முருகனின் சட்டையை பிடித்து ரமேஷ் தாக்கினார். முருகன் புகாரையடுத்து, கொரட்டூர் போலீசார், ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பணம், நகை தவறவிட்ட பெண்
வியாசர்பாடி: ஆந்திராவைச் சேர்ந்த சரம்மா, 57, வியாசர்பாடியில் வசிக்கிறார். இரு நாட்களுக்கு முன், சென்ட்ரலில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்ற போது, கைப்பையை தவறவிட்டார். அதில், 70,000 மதிப்புள்ள 5 கிராம் தங்க நகை, 15,000 ரொக்கம், வங்கி புத்தகம் உள்ளிட்டவை இருந்தன. இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை ரேடியல் சாலையில், சென்னை ஒன் ஐ.டி., பூங்கா வளாகம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாபு மேடே, 31, என்பவரை, போலீசார் நேற்று பிடித்தனர். அவரிடம் இருந்த பையில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 500 கிராம் கஞ்சா, 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம்: போலீஸ்காரர் கைது
கிண்டி: ஓட்டேரி காவல் நிலைய போலீஸ்காரர் கோதண்டபாணி மகளுக்கு கால் வலி ஏற்பட்டது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, மகளின் கால் பாதம் அகற்றப்பட்டது.
தவறான சிகிச்சையால் மகள் சிரமப்படுவதாக கூறி, சில ஆண்டுகளாக, கோதண்டபாணி போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில், மகள், மகனுடன், கவர்னர் மாளிகை முன் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தினார்். போலீசார் அவரை பிடித்து கைது செய்து, மாலை விடுவித்தனர்.
கார் மோதி மாணவர் காயம்
ஆலந்துார்: நங்கநல்லுார், காந்தி நகரைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மகன் ஜான் அகஸ்டின், 18, கத்திப்பாரா மேம்பாலத்தில் நேற்று மாலை ஓட்டிச்சென்ற 'ராயல் என்பீல்டு' பைக் மீது, பின்னால் வந்த 'ஹூண்டாய்' கார் மோதியது. இதில், 30 அடி உயர பாலத்தில் இருந்து விழுந்த ஜான் அகஸ்டினின் கை எலும்பு முறிந்தது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
