ADDED : ஆக 24, 2026 03:14 AM
ஆடையை கழற்றிய பெண்ணால் பரபரப்பு
எம்.கே.பி., நகர்: வியாசர்பாடி பகுதியில் நேற்று முன்தினம் சாலையோரம் நடந்து சென்ற இளம்பெண் ஒருவர், திடீரென தன் ஆடைகளை கழற்றி எறிந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பெண்கள், தங்களிடம் இருந்த உடையை பெண்ணிற்கு அணிவித்து, சிங்கப்பெண் சிறப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரின் விசாரணையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், 18 வயதான அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிந்தது. இதையடுத்து எம்.கே.பி., நகர் மகளிர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தகவலறிந்து வந்த பெண்ணின் உறவினர்களுக்கு, போலீசார் அறிவுரை கூறி அப்பெண்ணை அனுப்பி வைத்தனர்.
நுாதன முறையில் ஸ்கூட்டர் திருட்டு
வியாசர்பாடி: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் தனுஷ், 22. இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, தன் டி.வி.எஸ்., என்டார்க் ஸ்கூட்டரில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வியாசர்பாடி, அம்பேத்கர் கல்லுாரி அருகே, அவ்வழியாக 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரை தள்ளி சென்ற இரண்டு வாலிபர்கள், தனுஷிடம் உதவி கேட்டுள்ளனர். தனக்கு 'டோப்' செய்ய தெரியாது என தனுஷ் கூறியுள்ளார். தாங்கள் 'டோப்' செய்வதாக கூறிய வாலிபர்கள், தாங்கள் தள்ளி வந்த வாகனத்தை தனுஷிடம் கொடுத்து, அவரது ஸ்கூட்டரில் ஏறி அமர்ந்துள்ளனர். சிறிது துாரம் 'டோப்' செய்த வாலிபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில், தனுஷின் ஸ்கூட்டரை திருடி சென்றனர். அதிர்ச்சியடைந்த தனுஷ், வியாசர்பாடி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
