UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 07:07 PM

கடைக்காரரை தாக்கிய இருவர் பிடிபட்டனர்
அண்ணாசாலை: திருவல்லிக்கேணி, எல்லிஸ் சாலையைச் சேர்ந்தவர் அப்துல் கனி, 45. இவர் ரிச்சி தெருவில் மொபைல்போன் உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். கடந்த 21ம் தேதி இரவு ‘டாஸ்மாக்’ கடையில் மதுவாங்கச் சென்றார். அப்போது இருவர், வீண் தகராறு செய்து கீழே கிடந்த மரக்கட்டையால், அப்துல் கனியை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து விசாரித்த அண்ணாசாலை போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட திருவொற்றியூரைச் சேர்ந்த பார்த்திபன், 25, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த எடா நாகபாபு, 20 ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.
‘இன்ஸ்டா’ காதல் விபரீதம்: இளைஞர் தற்கொலை
மணலி: மணலி, சின்னசேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி வெங்கடாஜலபதி, 22; ‘ஆன்லைன்’ நிறுவன உணவு டெலிவரி ஊழியர். நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மணலி போலீசாரின் விசாரணையில், ஜோதி வெங்கடாஜலபதியும் கோயம்புத்துாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும், ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளம் வாயிலாக பழக்கமாகி, காதலித்து வந்துள்ளனர். இரு தினங்களாக அப்பெண் பேசுவதை தவிர்த்ததால், விரக்தியடைந்த ஜோதி வெங்கடாஜலபதி தற்கொலை செய்தது தெரிய வந்தது.
ஓட்டேரி பகுதியில் லாட்டரி விற்ற இருவர் கைது
ஓட்டேரி: ஓட்டேரி, கொசப்பேட்டையில், அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஓட்டேரி, கொசப்பேட்டை மார்க்கெட் சச்சிதானந்தம் பிரதான தெருவைச் சேர்ந்த கிஷோர் குமார், 21, ஓட்டேரி செல்வ பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன், 32. ஆகியோரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இரும்பு பொருட்கள் திருடியவருக்கு ‘கம்பி’
வியாசர்பாடி: வியாசர்பாடி, பெரியார் நகரைச் சேர்ந்தவர் முரளி, 36. இவர், வியாசர்பாடி மூர்த்திங்கர் நகரில் விளம்பர பலகை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 16ம் தேதி கடையில் இருந்த வெல்டிங் மிஷின், கேபிள்கள் மற்றும் இரும்பு பொருட்கள் திருட்டு போயிருந்தன. வியாசர்பாடி போலீசாரின் விசாரணையில், மாதவரத்தைச் சேர்ந்த அர்ஜுன் சிங், 30 என்பவர், திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தலைமறைவு குற்றவாளி சிக்கினார்
புளியந்தோப்பு: -புளியந்தோப்பு, ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் ரபிக், 25. ரவுடியாக வலம் வரும் இவர் மீது, 16 வழக்குகள் உள்ளன. வழக்கு ஒன்றில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். நீதிமன்றம் இவருக்கு ‘பிடிவாரன்ட்’ பிறப்பித்ததை அடுத்து, புளியந்தோப்பு போலீசார் நேற்று அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுமியை தாக்கிய போதை ஆசாமி கைது
ஓட்டேரி: புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்து, வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது போதை ஆசாமி ஒருவர் சிறுமியிடம் அவதுாறாக பேசியுள்ளார். ‘ஏன் இப்படி பேசுகிறாய்’ என் சிறுமி கேட்டதற்கு, அந்த நபர் சிறுமியை தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரித்த ஓட்டேரி போலீசார், சிறுமியை தாக்கிய ஓட்டேரி சச்சிதானந்தம் தெருவைச் சேர்ந்த சந்தோஷ், 22, என்பவரை நேற்று கைது செய்தனர்.
