ADDED : அக் 25, 2026 02:29 PM

வாகனம் மோதி மூதாட்டி பலி
நீலாங்கரை: நீலாங்கரையைச் சேர்ந்த ராகவேல் மனைவி கிருஷ்ணவேணி, 60. இருவரும் அப்பகுதி நிறுவனத்தில் காவலாளிகள். நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, கிருஷ்ணவேணி சாலையைக் கடந்து குப்பை கொட்டச் சென்றார். அப்போது, அக்கரையிலிருந்து திருவான்மியூர் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது
நெற்குன்றம்: நெற்குன்றம், ஜெயராம் நகரைச் சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ், 38. இவரது மனைவி பிருந்தா, 33. நேற்று முன்தினம் இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்த சுரேஷ், மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்த மனைவியை சந்தேகப்பட்டு தகராறு செய்தார். வாக்குவாதம் முற்றி, காய்கறி வெட்டும் கத்தியால் பிருந்தாவின் வயிற்றில் சரமாரியாகக் குத்தினார். காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெறுகிறார். கோயம்பேடு போலீசார், சுரேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாலிபரை தாக்கி 3 சவரன் செயின் பறிப்பு
திருவல்லிக்கேணி: வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ‘ரேபிடோ’ பைக் டாக்சி ஓட்டுநர் கார்த்திக், 25, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, அண்ணா சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றார். மன்றோ சிலை அருகே மூன்று பேர் அவரை வழிமறித்துத் தாக்கி, கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்தனர். ராணுவக் குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பிரதான சாலையில் நடந்த இச்சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதலில் ஒரே வாரத்தில் 3 பேர் தற்கொலை
திருவொற்றியூர்: திருவொற்றியூர், சாத்தாங்காடு, மேட்டுத் தெருவைச் சேர்ந்த காமேஷ், 19, ‘கூரியர்’ நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தவர், அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார், உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்ததில், காதலி பேசாத விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே 21, 23ம் தேதிகளில் காதல் விவகாரத்தால் இரு வாலிபர்கள் தற்கொலை செய்த நிலையில், ஒரே வாரத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
வழிப்பறி வாலிபர் கைது: 6 போன்கள் பறிமுதல்
பெரம்பூர்: பெரம்பூரில் கடந்த வாரம், வெவ்வேறு இடங்களில் மொபைல்போன் வழிப்பறி நடந்தது. இவ்வழக்கில், கண்காணிப்பு கேமரா உதவியுடன், திருடர்களை தேடி வந்த செம்பியம் போலீசார், வியாசர்பாடியை சேர்ந்த அன்பரசு என்ற விஷால், 21, என்பவரை நேற்று கைது செய்தனர். அவர் திருடி விற்ற ஆறு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
மாநகராட்சி ஊழியர் மண்டை உடைப்பு
அமைந்தகரை: அமைந்தகரை, பி.பி.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன், 39; மாநகராட்சி தற்காலிக ஊழியர். இவருக்கும், நண்பர் நந்தகுமாருக்கும் பணம் கொடுக்கல் -– வாங்கல் தொடர்பாக கடந்த 21ல் தகராறு ஏற்பட்டது. மேத்தா நகர் பாலம் அருகே நடந்து சென்ற சத்தியநாராயணனை, ஆட்டோவில் வந்த நந்தகுமார், அவரது நண்பர்கள் நால்வர், பீர் பாட்டிலால் தாக்கினர். காயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சேத்துப்பட்டு போலீசார், அமைந்தகரையைச் சேர்ந்த நந்தகுமார், 36, ரஞ்சித், 21, ஆகிய இருவரையும் கைது செய்து, தலைமறைவான மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
கார் மோதி போலீஸ் பூத் சேதம்
அம்பத்துார்: அம்பத்துார், வெங்கடாபுரத்தைச் சேர்ந்த பாண்டியன், 46, ‘சுசூகி எர்டிகா’ காரில் அம்பத்துார் – செங்குன்றம் நெடுஞ்சாலையில் கள்ளிக்குப்பம் நோக்கி, நேற்று சென்று கொண்டிருந்தார். புதுார் சந்திப்பு அருகே குறுக்கே வாகனங்கள் வந்ததால், பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், புதுார் போலீஸ் பூத் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரு பைக்குகள், போலீசாரின் நிழற்கூடை, பழக்கடை ஆகியவை சேதமடைந்தன. இதில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.
ஜாம்பஜாரில் பிரியாணி கடை சூறை
ஜாம்பஜார்: ராயப்பேட்டை, மீசாப்பேட்டை சந்தை அருகே உள்ள சார்மினார் கடையில், நேற்று மதியம் சாப்பிடச் சென்ற இருவர், பிரியாணியுடன் வழங்கிய பிரட் அல்வா சுவையாக இல்லை எனக்கூறி ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். கடையை சூறையாடியதுடன், ஊழியர் அப்துல் கரீமை கத்தியால் வெட்டி தப்பினர். காயமடைந்த அவருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆறு தையல்கள் போடப்பட்டன. ஜாம்பஜார் போலீசார், ஜாம்பஜாரைச் சேர்ந்த ரவுடி ஆனந்த், 27, சதீஷ், 24, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பைக் திருடன் பிடிபட்டான்
மணலி: மணலியைச் சேர்ந்த சுஜித், நேற்று முன்தினம் இரவு, பாடசாலை தெருவில் டீ கடைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது, அவரது ‘ஆக்டிவா’ ஸ்கூட்டரை காணவில்லை. இதேபோல், உதயதீபன் என்பவரின் பைக்கும் திருடுபோனது. மணலி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த மணிகண்டன், 29, என்பவரை நேற்று கைது செய்தனர். திருடப்பட்ட ஸ்கூட்டர், பைக்கை பறிமுதல் செய்தனர்.
கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு
ஜல்லடியன்பேட்டை: ஜல்லடியன்பேட்டை, காந்தி தெருவில் உள்ள கங்கையம்மன் கோவிலில், அம்மன் சிலையின் கழுத்திலிருந்த அரை சவரன் தங்கத் தாலியை, நேற்று, மர்ம நபர்கள் திருடினர். கருவறையில் இருந்த ‘சி.சி.டி.வி.’ கேமரா பதிவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்க் திருடுபோனது தெரிந்தது. அருகிலுள்ள குளத்தில் அந்த ஹார்டு டிஸ்க் கண்டெடுக்கப்பட்டது.
* பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு பித்தளை பூஜை பொருட்களை திருடி தப்ப முயன்ற விஜிவேல், 24, என்பவரை, ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தி பிடித்து, போலீசில் ஒப்படைத்தார்.
வெளிமாநில லாட்டரி விற்ற 5 பேர் சிக்கினர்
கே.கே., நகர்: கே.கே.நகரில், வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கணேசன், 57, மேற்கு கே.கே.நகரைச் சேர்ந்த கோவிந்தராஜன், 37, வினிஸ், 30, வினோத், 32, ஆகிய நான்கு பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆறு மொபைல் போன்கள், 15 ஆயிரத்து 850 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், காமராஜர் சாலை சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் மறைத்து லாட்டரி விற்ற மாங்காடு, பரணிபுத்துாரைச் சேர்ந்த ஆனந்தன், 40, என்பவரையும் கைது செய்து, மொபைல் போன், டி.வி.எஸ்., ஜூபிடர் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
