தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


ADDED : நவ 10, 2026 04:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 04:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆட்டோ ஓட்டுநர்களிடையே மோதல்

தி.நகர்: சென்னையில் ஆட்டோ ஓட்டி வருபவர்கள், புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முகம், 38, தி.நகரைச் சேர்ந்த வேணுகோபால், 44, எல்லப்பன், 46. சமீபத்தில் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி, தி.நகர் டாக்டர் நாயர் சாலையில் இருந்த சண்முகத்தை, எல்லப்பன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாகவும், பதிலுக்கு சண்முகம், கம்பியால் வேணுகோபால், எல்லப்பன் ஆகியோரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டனர். பாண்டி பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.

வாகனங்களை நொறுக்கி ரவுடிகள் ரவுசு

பெரம்பூர்: வியாசர்பாடி, கக்கன்ஜி காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ், 29; ஆட்டோ ஓட்டுநர். தீபாவளியன்று இரவு 11:00 மணியளவில் இவரது ஆட்டோ உட்பட இரண்டு ஆட்டோக்கள், இரண்டு பைக்கை 10க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல், அடித்து உடைத்துச் சென்றுள்ளது. இது குறித்து செம்பியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பட்டாசு விபத்து: ஊழியரை தாக்கியோர் கைது

துரைப்பாக்கம்: பெருங்குடி, கல்லுக்குட்டையை சேர்ந்தவர் பிரபாகரன், 31; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் மொட்டை மாடியில் குடும்பத்துடன் பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரின் மீது தெறித்துள்ளது. இது குறித்து, விஜய், பிரபாகரனிடம் கேட்டுள்ளார்.

இதில் ஏற்பட்ட தகராறில், விஜய் நண்பர்களை வரவழைத்து, பிரபாகரன் மற்றும் அவர் வீட்டு பெண்களை கையால் தாக்கினர். விசாரித்த துரைப்பாக்கம் போலீசார், நேற்று, விஜய், 19, தட்சிணாமூர்த்தி, 45, மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 27, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்ற மூவருக்கு ‘கம்பி’

ஓட்டேரி: சென்னை தலைமைச் செயலகக் காலனி பகுதியில், நேற்று மதியம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட புரசைவாக்கம், திடீர் நகரைச் சேர்ந்த சுரேஷ், 22, தாஜா, 24, பீட்டர், 19, ஆகியோரை தலைமைச் செயலக காலனி போலீசார், நேற்று கைது செய்தனர். 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அக்கா வீட்டில் நகை திருடிய தம்பி கைது

ஏழுகிணறு: ஏழுகிணறு, பழைய சிறைச்சாலை சாலையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிப்பவர் நாகவள்ளி, 39. இவரது தம்பி மாரிமுத்து, 36, வீட்டில் பங்கு கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், 6ம் தேதி, நாகவள்ளியின் வீடு புகுந்து, தங்க நகைகள், 200 கிராம் வெள்ளிக் கொலுசுகள் மற்றும் 1.14 லட்சம் ரூபாயை, மாரிமுத்து, நண்பர் விக்ரம், 18, என்பவருடன் சேர்ந்து திருடியுள்ளார். விசாரித்த போலீசார், இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மூதாட்டியின் சுருக்கு பை திருட்டு

திருவொற்றியூர்: திருவொற்றியூர், பட்டினத்தார் கோவில் தெருவில், வாழைப்பழம் வியாபாரம் செய்து வருபவர் பத்மா, 60.

இவரது கடைக்கு நேற்று முன்தினம் புர்கா அணிந்து வந்த இரண்டு பெண்கள், ஏழு டஜன் வாழைப்பழங்கள் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். பின், பழங்கள் சரியில்லை எனக்கூறி சென்று விட்டனர்.

சிறிது நேரம் கழித்து, பணம் வைப்பதற்காக தன் சுருக்கு பையை மூதாட்டி தேடியுள்ளார். அது திருட்டு போனது தெரிய வந்தது. அதில், 30 ஆயிரம் ரூபாய், 2,000 மதிப்புள்ள மாத்திரைகள், ஆதார் கார்டு உள்ளிட்டவை இருந்துள்ளன.

திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கைவரிசை காட்டிச் சென்ற இரு பெண்களையும் தேடி வருகின்றனர்.

மது தகராறால் நண்பர்கள் இடையே மோதல்

பெசன்ட் நகர்: பெசன்ட் நகர், திடீர் நகரைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 38; பெயின்டர். ஓடைக்குப்பத்தை சேர்ந்தவர் வசந்த், 30. நண்பர்களான இருவரும், அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். நேற்று முன்தினம், வசந்த், ஜெயகுமாருக்கு தெரியாமல் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில், வசந்த் கத்தியால் வெட்டியதில், ஜெய குமார் பலத்த காயம் அடைந்தார். திருவான் மியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொழிலாளியை வெட்டிய ரவுடி கைது

ஓட்டேரி: ஓட்டேரி, செல்லப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவி, 55; கூலித்தொழிலாளி. இவர், நேற்று மாலை 4:00 மணியளவில் ஓட்டேரி எட்வர்ட் பார்க் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் போதையில் படுத்திருந்தார். அப்போது மர்ம நபர், அவரது பாக்கெட்டை சோதனை செய்து, பணம் இல்லாததால் ரவியை கத்தியால் வெட்டி தப்பினார். அப்பகுதியினர் ரவியை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஓட்டேரி போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், 25, என்ற நபரை கைது செய்தனர்.

டீக்கடை ஊழியரின் மண்டை உடைப்பு

வடபழனி: வடபழனி 100 அடி சாலையில் உள்ள டீக்கடையில் பணிபுரிந்து வருபவர் ராகேஷ், 25. நேற்று முன்தினம் வடபழனி அழகர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த தயாளன், 30, என்பவர், மதுபோதையில் கடைக்கு வந்து சிகரெட் வாங்கினார். ஆனால் பணம் கொடுக்கவில்லை. இதனால், தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தயாளன், கண்ணாடி பாட்டிலின் மூடியால் ராகேஷின் தலையில் தாக்கியுள்ளார். இதில், ராகேஷுக்கு இரண்டு தையல்கள் போடப்பட்டன. வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மடிக்கணினி திருடிய துாய்மை பணியாளர் கைது

மாம்பலம்: தி.நகர் ராமேஸ்வரம் தெருவில் உள்ள அத்தை வீட்டில் ராஜஸ்ரீ, 21, என்பவர் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை, வீட்டின் மாடி அறையில் இருந்த இவரது மடிக்கணினி மற்றும் மொபைல் போன் திருடுபோனது தெரியவந்தது. விசாரித்த மாம்பலம் போலீசார், கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த துாய்மை பணியாளர் ஜெய முரளி, 36, என்பவரை நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us