
கோடம்பாக்கம் வாலிபரை தாக்கி வழிப்பறி: 3 பேர் கைது கோடம்பாக்கம்: கோடம்பாக்கம், குகன் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 35; 'ஹோம் கேர்' ஊழியர். கடந்த 22ம் தேதி வேலை முடிந்து, கோடம்பாக்கம், இந்தியன் வங்கி அருகில் நடந்து சென்றார். அப்போது, வேகமாக வந்த ஆட்டோவால், சாலையில் மழை நீருடன் தேங்கிய கழிவுநீர் சந்தோஷ்குமார் மீது பட்டுள்ளது.
இதை கண்டித்த சாந்தோஷ்குமாரை, ஆட்டோவில் இருந்த மூவரும் சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்து 5,750 ரூபாயை பறித்து தப்பினர்.
இது குறித்து விசாரித்த கோடம்பாக்கம் போலீசார், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 24, ரூக்கேஷ், 27, திருவள்ளூரைச் சேர்ந்த பாலாஜி, 25, ஆகிய மூவரை கைது செய்து, 1,570 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கோவில்களில் கைவரிசை புளியந்தோப்பு வாலிபர்கள் கைது பாண்டிபஜார்: தி.நகர் அடுத்த மாம்பலம் பகுதியில் உள்ள ஸ்ரீ தேவி ஆயிரம் கண்படைத்த முத்து மாரியம்மன் கோவில் மற்றும் அருகில் உள்ள சாய்பாபா கோவிலிலும், கடந்த 16ம் தேதி உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு நடந்தது.
அம்மன் கோவிலில் 10,000 ரூபாயும், சாய்பாபா கோவிலில் தங்கம், வெள்ளி பொருட்களும் திருடு போயிருந்தன. பாண்டிபஜார் போலீசார், திருட்டில் ஈடுபட்ட புளியந்தோப்பைச் சேர்ந்த சதீஷ், 21, ரஞ்சித், 19, ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் இருவரும், கோவில்களில் மட்டும் குறிவைத்து திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து, 10,000 ரூபாய், 2.9 கிராம் தங்கம், 175 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வியாசர்பாடியில் வீடு புகுந்து தங்கம், வெள்ளி நகை திருட்டு வியாசர்பாடி: வியாசர்பாடி, சாஸ்திரி நகர், 12வது தெருவைச் சேர்ந்தவர் பாத்திமா, 19. இவர் தன் கணவர் பயாஸை, கண் சிகிச்சைக்காக எழும்பூர் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
சிகிச்சை முடிந்து நேற்று வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பீரோவை உடைத்து மர்ம நபர்கள், ஒரு சவரன் தங்க செயின், 2 தங்க மோதிரங்கள் மற்றும் 35 கிராம் எடையுள்ள வெள்ளி செயின் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து பாத்திமா அளித்த புகாரின்படி, எம்.கே.பி., நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

