ADDED : ஜூன் 01, 2026 08:26 AM
வியாபாரியை தாக்கிய இருவர் கைது
கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகரைச் சேர்ந்தவர் செந்தில், 45; முட்டை வியாபாரி. இவரது மகனை தேடி, அதே பகுதியைச் சேர்ந்த குணா, 19, கிரி, 21, ஆகியோர், நேற்று வீட்டிற்கு வந்தனர். மகன் இல்லாததால், செந்திலிடம் வாக்குவாதம் செய்தனர்.
கல் மற்றும் உருட்டு கட்டையால் அவரை தாக்கி தப்பிச் சென்றனர். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது. விசாரித்த போலீசார், குணா, கிரி ஆகியோரை கைது செய்தனர்.
கஞ்சாவுடன் திரிந்த இளைஞர் கைது
சென்னை: தலைமைச் செயலக காலனி அருகே, திடீர் நகர் பகுதியில், போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்கு, சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சலாவுதீன், 22, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 42 வலி நிவாரண போதை மாத்திரைகள் மற்றும் 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
பைக் திருடிய சிறுவன் சிக்கினான்
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, திருவேங்கடம் தெருவைச் சேர்ந்தவர் ரஹீம், 40. காய்கறி கடையில் பணியாற்றும் இவர், தன் இருசக்கர வாகனத்தை, வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். நேற்று முன்தினம் அந்த வாகனம் திருடுபோனது.
ரஹீம் புகாரையடுத்து, புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து, இருசக்கர வாகனத்தை திருடிய, ஓட்டேரியைச் சேர்ந்த, 17 வயது சிறுவனை நேற்று கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
மது விற்ற பெண்ணுக்கு 'காப்பு'
வானகரம்: வானகரம், நுாம்பல் திருவீதி அம்மன் கோவில் தெருவில், நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார், ஒரு வீட்டின் பின்புறத்தில் இரண்டு சாக்கு பைகளுடன் நின்றிருந்த பெண்ணை பிடித்தனர்.அவர், துண்டலம் திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கவிதா, 39, என்பதும், சாக்கு பையில், 72 மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
