UPDATED : ஜூலை 21, 2026 07:30 PM
ADDED : ஜூலை 21, 2026 05:33 PM
சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரம் நடத்தப்பட்ட சோதனையில், குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்ற 86 பேர் கைது செய்யப்பட்டனர். 465 கிலோ குட்கா, பைக், ஆட்டோ உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டன.
மொபைல் போன் பறித்த மூவர் கைது
கோயம்பேடு: திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் முருகன், 26. கடந்த 19ம் தேதி, கோயம்பேடு - பூந்தமல்லி சாலை, குடிநீர் வாரிய அலுவலகம் அருகே நின்றிருந்த இவரிடம் மொபைல் போன் பறித்த, திருவண்ணாமலையைச் சேர்ந்த சரவணன், 36, நெற்குன்றத்தை சேர்ந்த செந்தில், 45, திருநெல்வேலியைச் சேர்ந்த குமார், 46, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
--------------
ஓய்வுபெற்ற சிறை அதிகாரியின் சடலம் மீட்பு
நன்மங்கலம்: நன்மங்கலம், மணிகண்டன் நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற சிறை சூப்பிரண்டு மனோகர், 73. மனைவி இறந்ததால் தனியாக வசித்து வந்தார். மகன் வெளிநாட்டிலும், மகள்கள் இருவர் வெளியூரிலும் வசிக்கின்றனர். மூன்று நாட்களாக மனோகரை மொபைல்போனில் தொடர்பு கொள்ள முடியாததால், உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்று பார்த்தார்; வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. தகவலின்படி வந்த மேடவாக்கம் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மனோகர் உயிரிழந்த நிலையில் கிடந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
------------
பித்தளை 'பர்னர்கள்' திருடியவர் கைது
கே.கே.நகர்: அசோக் நகர் 18வது அவென்யூ அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் கணேஷ், 38. கடந்த 19ம் தேதி காலை வீட்டின் தரைத்தள 'பார்க்கிங்' பகுதிக்கு சென்றபோது, அங்கிருந்த 'காஸ்' அடுப்பில் இருந்த நான்கு பித்தளை பர்னர்கள் திருடு போயிருந்தன. விசாரித்த கே.கே.நகர் போலீசார், திருட்டில் ஈடுபட்ட நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ஏழுமலை, 35, என்பவரை கைது செய்தனர்.
------------
