தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்//

 கிரைம் கார்னர்//

 கிரைம் கார்னர்//


ADDED : ஆக 19, 2026 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 12:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர் கொலையில் மேலும் 4 பேர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூர், காலடிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் தனுஷ்குமார், 17. கடந்த 14ம் தேதி, பள்ளி முன் நின்றிருந்தவரை, 30 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே தனுஷ்குமார் உயிரிழந்தார். விசாரித்த திருவொற்றியூர் போலீசார், சண்முகபுரத்தைச் சேர்ந்த தியாகராஜன், 18 மற்றும் 11 சிறுவர்கள் உட்பட 12 பேரை, மறுநாளே கைது செய்தனர். இந்த நிலையில், ஆந்திரா மற்றும் கும்மிடிப்பூண்டியில் பதுங்கியிருந்த நான்கு சிறுவர்களை, நேற்று மாலை கைது செய்தனர். இதுவரை 16 பேர் கைதாகியுள்ளனர்.

கல்லுாரி மாணவி தற்கொலை

அரும்பாக்கம்: அரும்பாக்கம், ராணி அண்ணா நகரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி, 20; தனியார் கல்லுாரி மாணவி. நேற்று முன்தினம் கல்லுாரி முடிந்து வீட்டிற்கு வந்தவர், துாக்கிட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது

எழும்பூர்: நந்தம்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் மகாவீர், 47, ஆயுதப்படை காவலர் சுந்தரமகாலிங்கம், 31, ஆகியோர், 'ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஹீரோ ஸ்பிளண்டர்' டூ - வீலர்களில், எழும்பூர், பாந்தியன் சாலை வழியாக நேற்று முன்தினம் மாலை சென்றனர். அப்போது, மதுபோதையில் ஆட்டோ ஓட்டி வந்த ஆயிரம்விளக்கைச் சேர்ந்த நாகராஜ், 37, என்பவர், டூ - வீலர்கள் மீது மோதினார். அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறுகாயத்துடன் தப்பினர். திருவல்லிக்கேணி போக்குவரத்து போலீசார், நாகராஜை நேற்று கைது செய்தனர்.

700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், விம்கோ நகர், நந்தியம்பாக்கம் மற்றும் மீஞ்சூர் ரயில் நிலையங்களில் நேற்று, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவிற்கு ரயில் வழியாக கடத்துவதற்காக, நடைமேடையில் பயணியர் இருக்கைகளின் கீழ் 30 மூட்டைகளில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, பட்டரவாக்கம் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

புழல் ஏரியில் மூழ்கியவர் பலி

புழல்: புழல் கன்னடப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தனியார் திருமண மண்டப மேலாளர் கார்த்திக், 43. காவாங்கரை கண்ணப்பசாமி நகரில் அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயத்தின் 41ம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு, கடந்த ஞாயிறன்று தீமிதி விழாவில் பங்கேற்று திரும்பும் போது அவர் மாயமானார். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கார்த்திக்கை தேடியும் கண்டறிய முடியாததால், ஏரியில் மூழ்கியிருக்கலாம் எனக்கருதி, புழல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்நிலை யில், நேற்று மாலை புழல் ஏரியில் கார்த்திக் சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு மனைவியும், இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை

அம்பத்துார்: அம்பத்துார், கள்ளிக்குப்பம், மேற்கு பாலாஜி நகரைச் சேர்ந்தவர் கில்பர்ட் ராஜ், 40; ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி அனிதா, 36. இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், விரக்தியடைந்த கில்பர்ட் ராஜ் நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்தார். புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us