ADDED : ஜூலை 19, 2026 03:51 AM
கொளத்துார் பெரியார் நகர் பேருந்து நிலையத்தில் இருந்த 17 வயது சிறுமியை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரவிசந்திரன், 30, என்பவர் சீண்டியுள்ளார். அவரை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பூக்கடை பகுதியில் துணிகள் விற்பனை செய்யும் உ.பி., வாலிபர் மோ அனாஸ், 20, என்பவரின் மொபைல் போனை பறித்த வழக்கில், பிராட்வேயைச் சேர்ந்த ரமேஷ், 23, மற்றும் 17 வயது சிறுவன் கைதாகினர். சிறுவன், சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.
கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிளம்பர் சரவணன், 29, நேற்று சாலையில் நடந்து சென்றபோது, அவரை வழிமறித்து வெட்டிய யுவராஜ், அவரது நண்பர் கிரியை, ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.
வேளச்சேரி அருகே தனியார் கிளினிக்கில் செவிலியராக பணிபுரியும் ரோகிணியின், 21, மொபைல் போனை திருடிய தியாகராஜன், 67, என்பவரை, மடிப்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கொளத்துார், பாரதி நகர் அருகே இந்தியன் வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தில் திருட முயன்ற, பேப்பர் மில்ஸ் சாலையில் குமரன், 28, என்பவரது அடகு கடையில் 10 கிராம் வெள்ளி நாணயம் திருடிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பஹதுார் சேத்ரியை, 27, போலீசார் நேற்று கைது செய்தனர்.
வியாசர்பாடி, மேல்பட்டி பொன்னப்பன் தெருவில், தியாகராஜன், 40, என்பவருக்கு சொந்தமான, 'ஆப்டிக்கல்ஸ்' கடையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. கண் பரிசோதனை கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் தீக்கிரையாகின.
கொளத்துார், தென்பழனி பகுதியில் செந்தில்குமார், 41, நடத்திவரும் தள்ளுவண்டி உணவகத்திற்கு இரு நாட்களுக்கு முன் சென்ற மூவர், மாமூல் கேட்டு மிரட்டினர். ரவுடி நரேஷ்குமார், 23, ரவிசந்திரன், 21, குள்ள கார்த்திக், 21, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
ஓட்டேரியில், சச்சிதானந்தம் தெருவில் உள்ள பெட்டி கடையில் குட்கா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி நேற்று சோதனை நடத்தப்பட்டது. இதில், அமுல்ராஜ், 48, என்பவரை ஓட்டேரி போலீசார் கைது செய்தனர்.
