/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாறு முகத்துவாரம் ஆழப்படுத்த நீர்வளத்துறை ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு
/
அடையாறு முகத்துவாரம் ஆழப்படுத்த நீர்வளத்துறை ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு
அடையாறு முகத்துவாரம் ஆழப்படுத்த நீர்வளத்துறை ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு
அடையாறு முகத்துவாரம் ஆழப்படுத்த நீர்வளத்துறை ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : மார் 08, 2024 12:13 PM
சென்னை, அடையாறு முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணிகளை, 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர்வளத் துறை மேற்கொள்ளவுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் அருகே துவங்கும் அடையாறு ஆறு, 42.5 கி.மீ., பயணித்து சென்னை, பட்டினப்பாக்கம் அருகே வங்க கடலில் கலக்கிறது.
இந்த ஆற்றில், பல்வேறு ஏரிகளின் நீர் மட்டுமின்றி, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கழிவுநீரும் கலந்து வருகிறது. இதனால், கோடைக்காலத்தில் அடையாறு ஆற்றில் துர்நாற்றம் வீசுகிறது.
அடையாறு ஆற்றை சீரமைப்பதற்கான பணிகள், சென்னை வெள்ள தடுப்பு அறக்கட்டளை வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அடையாறு முகத்துவாரத்தில் மணல் அதிகளவில் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வெள்ள காலத்தில் மழைநீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்படுகிறது.
கடந்தாண்டு டிசம்பரில் 'மிக்ஜாம்' புயல் மற்றும் கனமழை கொட்டி தீர்த்தபோது, அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. முகத்துவார அடைப்பால் வெள்ளநீர் வெளியேறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதனால், தென் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளநீரில் பல நாட்கள் மிதந்தன. படிப்படியாக வெள்ளம் வடிந்து, இயல்பு நிலை திரும்ப 15 நாட்கள் ஆனது.
முகத்துவாரத்தை ஆழப்படுத்தினால், வெள்ளநீர் எளிதாக வெளியேறி பாதிப்பு குறையும். எனவே, முகத்துவாரத்தை துார்வாரி ஆழப்படுத்துவதற்கு, 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர்வளத் துறை வாயிலாக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, 12 கோடி ரூபாயில் அடையாறு முகத்துவாரம் துார்வாரும் பணிகளை நீர்வளத்துறை மேற்கொள்ளஉள்ளது.
இங்கு அள்ளப்படும், 2 லட்சம் கனமீட்டர் மணலை, அருகில் உள்ள சீனிவாசபுரம் கடற்கரையில் நிரப்புவதற்கு, தேசிய கடல் தொழிற்நுட்ப கல்வியியல் நிறுவனம் பரிந்துரை வழங்கிஉள்ளது.

