போதையில் ஆட்டோ ஓட்டிய நபரால் விபத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு
போதையில் ஆட்டோ ஓட்டிய நபரால் விபத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு
ADDED : நவ 04, 2026 07:42 PM
வடபழனி: போதையில் அதிவேகமாக ஆட்டோ ஓட்டிய நபரால், விபத்தில் சிக்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வடபழனி, ஆற்காடு என்.எஸ்.கே., சாலையைச் சேர்ந்தவர் சவுகார்ராஜ், 63. இவர், ஆற்காடு சாலையில் உள்ள ‘கமலா’ தியேட்டர் அருகே இன்று (நவ.,4) மாலை நடந்து சென்றார்.
அப்போது, வடபழனியில் இருந்து போரூர் நோக்கி அதிவேகமாக சென்ற ஷேர் ஆட்டோ, சவுகார்ராஜ் மீது மோதி, அருகிலிருந்த சுற்றுச்சுவரில் இடித்து நின்றது. இதில், பின் தலையில் பலத்த காயமடைந்த சவுகார்ராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மது போதையில் ஆட்டோ ஓட்டி விபத்து ஏற்படுத்திய அரியலுார் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த அன்பரசன், 39, என்பவரை கைது செய்து, பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
