கட்டணம் வசூலிப்பில் முறைகேடு மின்வாரிய ஆய்வாளர் சஸ்பெண்ட்
கட்டணம் வசூலிப்பில் முறைகேடு மின்வாரிய ஆய்வாளர் சஸ்பெண்ட்
UPDATED : அக் 27, 2026 08:41 PM
ADDED : அக் 27, 2026 08:37 PM
செம்பாக்கம்: செம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில், நுகர்வோர் ரொக்கமாக செலுத்திய மின் கட்டணத்திற்கு பதிலாக, காசோலை செலுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட, கணக்கீட்டு ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சேலையூரை அடுத்த மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் தங்கதுரை. தன் வீட்டு மின் இணைப்பு மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் என, 8 மின் இணைப்புகளுக்கான கட்டணம், 4,038 ரூபாயை, கடந்த 17ம் தேதி, செம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் ரொக்கமாக செலுத்தியுள்ளார். அதற்கான ரசீது வழங்கப்பட்டதுடன், கட்டணம் செலுத்தியதற்கான குறுஞ்செய்தியும், அவரது மொபைல் போனுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், 26ம் தேதி, 8 மின் இணைப்புகளுக்கு செலுத்திய காசோலையில் பணம் இல்லாததால், அது வங்கியிலிருந்து திரும்பி விட்டதாகவும், மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அவரது மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. ரொக்கமாக பணம் செலுத்தியதற்கான ரசீது இருந்தும், மீண்டும் கட்டணம் செலுத்துமாறு குறுஞ்செய்தி வந்ததால், தங்கதுரை அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து, நேற்று முன்தினம் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கணக்கீட்டு ஆய்வாளர் அருண்குமார், ரொக்கமாக பெறப்பட்ட பணத்துக்கு பதிலாக, அவரது பணம் இல்லாத வங்கி காசோலையை பயன்படுத்தி மின்வாரிய கணக்கில் செலுத்தியிருப்பது தெரிந்தது. இதையடுத்து அருண்குமார் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதேபோன்று வேறு நபர்களிடமும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
