/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரியில் ஆக்கிரமிப்பாளர்கள் அடாவடி 'சமூக சோலை' திட்டத்திற்கு தொடரும் சிக்கல்
/
வேளச்சேரியில் ஆக்கிரமிப்பாளர்கள் அடாவடி 'சமூக சோலை' திட்டத்திற்கு தொடரும் சிக்கல்
வேளச்சேரியில் ஆக்கிரமிப்பாளர்கள் அடாவடி 'சமூக சோலை' திட்டத்திற்கு தொடரும் சிக்கல்
வேளச்சேரியில் ஆக்கிரமிப்பாளர்கள் அடாவடி 'சமூக சோலை' திட்டத்திற்கு தொடரும் சிக்கல்
ADDED : ஆக 04, 2025 02:51 AM

சென்னை,:வேளச்சேரி ரயில்வே சாலையில், 'சமூக சோலை' என்ற திட்டத்தை துவங்க மாநகராட்சி திட்டமிட்டது. ஆனால், அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகளில் இடையூறு ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பாளர்களால், இத்திட்டம் செயல்வடிவம் பெறுவதில் சிக்கல் நீடிப்பதாக, வேளச்சேரி பகுதி நலச்சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.
வேளச்சேரி - தரமணி ரயில்வே சாலை, 2.5 கி.மீ., துாரம், 80 அடி அகலம் கொண்டது. இந்த சாலை, ரயில்வே நிர்வாகத்தின் கீழ் உள்ளது. வேளச்சேரி, பெருங்குடி, தரமணி ரயில் நிலையம் செல்வோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
மேலும், ஆதம்பாக்கம், நங்கநல்லுார், மடிப்பாக்கம், வேளச்சேரி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், ஓ.எம்.ஆர்., டைடல் பார்க், திருவான்மியூர், அடையாறு நோக்கி செல்ல, துரித பயணத்திற்கு இந்த சாலை வழியாக செல்கின்றனர்.
இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக மாறியுள்ளது. இந்த சாலையை பராமரிக்க ரயில்வே நிர்வாகம் முன்வரவில்லை. இதனால், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, 8 கோடி ரூபாயில் சாலை புதுப்பிப்பு, 1.37 கோடி ரூபாயில் வடிகால்வாய் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன.
இந்த சாலையை ஒட்டி, ரயில்வே மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமாக உள்ள காலி இடங்களின் பெரும் பகுதி ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தன.
நம் நாளிதழ் செய்தி மற்றும் உயர் நீதிமன்ற தலையீடு காரணமாக, பெரும் பகுதி மீட்கப்பட்டது. இன்னும், 10 ஏக்கருக்கு மேல் மீட்கப்பட வேண்டியுள்ளது.
இந்நிலையில், மீட்கப்பட்ட இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட்டு, மீண்டும் ஆக்கிரமிப்பில் சிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேளச்சேரி பகுதி நலச்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த ஆண்டு பருவமழையின் போது, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர், இந்த பகுதியை பார்வையிட்டனர். அப்போது, இந்த பகுதியை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என, அதிகாரிகளுக்கு இருவரும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, 2.5 கி.மீ., துாரத்தை சமூக சோலையாக மாற்ற, மாநகராட்சி திட்டமிட்டது. இதற்காக, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 25 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
இதில், நடைபயிற்சி பாதை, பறவைகள் சரணாலயம், சைக்கிள் பாதை, கலந்துரையாடல் கூடம், கடைகள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், மரக்கன்றுகள், இருக்கை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
கடந்த ஜூன் மாதம் துவங்க வேண்டிய இத்திட்டத்திற்கு, ஆக்கிரமிப்பாளர்களின் இடையூறு காரணமாக இழுபறி ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தை வேகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.