/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயில் பணியால் அடிக்கடி விபத்து 'பிளிங்கரிங்' சிக்னல் அமைக்க எதிர்பார்ப்பு
/
மெட்ரோ ரயில் பணியால் அடிக்கடி விபத்து 'பிளிங்கரிங்' சிக்னல் அமைக்க எதிர்பார்ப்பு
மெட்ரோ ரயில் பணியால் அடிக்கடி விபத்து 'பிளிங்கரிங்' சிக்னல் அமைக்க எதிர்பார்ப்பு
மெட்ரோ ரயில் பணியால் அடிக்கடி விபத்து 'பிளிங்கரிங்' சிக்னல் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 29, 2024 12:42 AM
சோழிங்கநல்லுார், சென்னையின் முக்கிய சாலையான ஓ.எம்.ஆரில் ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இந்த சாலையில், 20 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் பணி நடக்கிறது.
இதற்காக, எஸ்.ஆர்.பி.டூல்ஸ், பெருங்குடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லுார், ஆவின், குமரன்நகர், சத்தியபாமா, பழத்தோட்ட சாலை, நாவலுார் ஆகிய சந்திப்புகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிக்னல்களை அகற்றி 100, 200 அடி துாரத்தில் 'யு - டர்ன்' அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், முன்பைவிட போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்துள்ளது. ஆனால், விபத்துகள் அதிகரித்துள்ளன.
மாதத்திற்கு இரண்டு, மூன்று விபத்து மரணம், 15க்கும் மேற்பட்ட பலத்த காயம், 40க்கும் மேற்பட்ட சிறு காயம் வழக்குகள் பதிவாகின்றன.
சாலை மையப் பகுதியில் மெட்ரோ ரயில் பணிக்கான இரும்பு தடுப்பு அமைத்துள்ளதால், யு - டர்ன் சந்திப்புகளில் மறுதிசையில் வரும் வாகனங்கள் தெரியாமல், அதிக விபத்துகள் நடக்கின்றன.
அதுபோன்ற சந்திப்புகளில், துாரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், யு - டர்ன் சந்திப்புகளில் 'பிளிங்கரிங்' என்ற மஞ்சள் விளக்கு மிளிரும் சிக்னல் அமைக்க வேண்டும். இதை யார் அமைப்பது என, போக்குவரத்து போலீசார், சாலை மேம்பாட்டு நிறுவனம், மெட்ரோ ரயில் நிறுவனம் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சாலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, யு - டர்ன் சந்திப்புகளில் 'பிளிங்கரிங்' சிக்னல் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
முன்பு, சாலை மேம்பாட்டு நிறுவனம், சிக்னல் அமைத்து கொடுத்தது. தற்போது, மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் பராமரிப்பில் சாலை உள்ளது. விளம்பரதாரர் வாயிலாக சிக்னல் அமைக்க தயாராக உள்ளோம். ஆனால், மெட்ரோ ரயில் ஊழியர்கள் சிக்னல்களை அடிக்கடி அகற்றுகின்றனர். இதனால், மெட்ரோ ரயில் நிர்வாகத்திடமே பிளிங்கரிங் சிக்னல் அமைக்க, பல மாதங்களுக்கு முன்பே வலியுறுத்தினோம்.
அவர்கள் எந்த தகவலும் தெரிவிக்காமல் அலட்சியமாக உள்ளனர். விபத்துக்கு மெட்ரோ ரயில் பணி காரணமாக இருந்தாலும், பொதுமக்கள் எங்களை குறை கூறுகின்றனர். உயர் அதிகாரிகள் தான் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.