/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவு நீர் வெளியேற்றுவதை தடுத்து அட்டூழியம் திருநீர்மலை ஏரி துார் வாரும் பணிக்கு இடையூறு
/
கழிவு நீர் வெளியேற்றுவதை தடுத்து அட்டூழியம் திருநீர்மலை ஏரி துார் வாரும் பணிக்கு இடையூறு
கழிவு நீர் வெளியேற்றுவதை தடுத்து அட்டூழியம் திருநீர்மலை ஏரி துார் வாரும் பணிக்கு இடையூறு
கழிவு நீர் வெளியேற்றுவதை தடுத்து அட்டூழியம் திருநீர்மலை ஏரி துார் வாரும் பணிக்கு இடையூறு
UPDATED : ஆக 21, 2025 07:27 AM
ADDED : ஆக 21, 2025 01:09 AM

தாம்பரம்,திருநீர்மலையில், கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ள நபர், ஏரியின் மதகில் மணல் மூட்டைகளை அடுக்கி, வெளியேற்றப்பட்டு வரும் கழிவு நீரை தடுத்து, ஏரியை துார் வாரும் பணிக்கு முட்டுக்கட்டையாக உள்ளதாக, விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், தாம்பரம் வருவாய் கோட்ட அலுவலகத்தில், கோட்டாச்சியர் முரளி தலைமையில், நேற்று காலை நடந்தது.
கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்காததால், இம்முறை அனைத்து துறைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, நீர்வளத் துறை, வருவாய், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி, வட்டார வளர்ச்சி, தோட்டக்கலை, நகராட்சி, கனிம வளம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்தனர். மேலும், கடந்த கூட்டத்தில் விவசாயிகள் கொடுத்த மனுக்கள், அந்தந்த துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டன. அவை மீதான நடவடிக்கை குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், கோட்டாச்சியர் முரளி விளக்கம் கேட்டார்.
தொடர்ந்து, ஓரிரு நாட்களில் அது தொடர்பான விளக்கத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதே போல், இந்த கூட்டத்தில் வந்த மனுக்களும், அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
திருநீர்மலையில், கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலம், கார்ப்பரேட் நிறுவனத்திற்கு குத்தகை விடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, யாருக்கும் தெரியாமல், தனி நபர் ஒருவருக்கு, 5.5 ஏக்கர் நிலத்தை ரகசியமாக குத்தகைக்கு விட்டுள்ளனர்.
அவருக்கு எந்த பயன்பாட்டிற்காக, என்ன நிபந்தனையுடன் குத்தகை விடப்பட்டது என, தெரியவில்லை. இது குறித்து கேட்டால், யாரும் விளக்கம் தரவில்லை. குத்தகைக்கு எடுத்த கோவில் நிலத்தில், சாலை அமைத்துள்ளனர்.
ஏரியை துார்வாரி சீரமைக்க ஏதுவாக வெளியேற்றப்படும் கழிவு நீரை, கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ள நபர், மதகில் மணல் மூட்டைகளால் அடைத்து தடுத்துள்ளார்.
பாசன கால்வாய் மற்றும் வடிகால்வாயையும் அடைத்துள்ளார். இதை கண்டுகொள்ளாத அறநிலையத் துறை அதிகாரிகள், விவசாயம் செய்வதற்கு இடையூறாக உள்ள சீமை கருவேல மரங்களை விவசாயிகள் வெட்டினால், அதை தடுக்கின்றனர்.
வண்டலுார் மலையில் இருந்து வரும் தண்ணீர், வண்டலுார் சித்தேரி, பெரிய ஏரி, பெருங்களத்துார் ஏரி, முடிச்சூர் ஏரிகளில் கலந்து, அடையாறு ஆற்றுக்கு செல்லும்.
தற்போது, ஆக்கிரமிப்புகளால் ஏரிகளுக்கு செல்லாமல், நேரடியாக பெருங்களத்துார் வழியாக ஆற்றுக்கு செல்கிறது. இதனால், விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
முடிச்சூர் சீக்கனா ஏரியை சுற்றி கரை அமைத்து, குளம் போல் மாற்றிவிட்டனர். இதனால், தண்ணீர் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் வழியின்றி, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கரையின் ஒரு பகுதியை உடைத்துவிட்டாலே போதும், தண்ணீர் வெளியேறி கால்வாய் வழியாக செல்லும். இதனால், விவசாயமும் நடக்கும்.
விசாய நிலங்களில் பிளாட் போடுவோர், மலையின் பின்புறம் உள்ள நிலங்களுக்கு செல்ல வழி இல்லை. ஒரு இடத்தில் பிளாட் போடுவோர், சாலை அமைத்து, அது முட்டும் இடத்தில் உள்ள நிலத்தை காண்பித்து, அப்ரூவல் வாங்கி விடுகின்றனர்.
அதிகாரிகளும் இதை முறையாக விசாரிக்காமல், அப்ரூவல் கொடுக்கின்றனர். விவசாய நிலங்களில் பிளாட் அப்ரூவல் கொடுக்கும் போது, இதுபோன்ற விஷயத்தை ஆராய வேண்டும்.
அதேபோல், விவசாய நிலத்தில் கட்டப்படும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை, பாசனக் கால்வாயில் கலக்கின்றனர். இதனால், விவசாயம் அழியும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
திருநீர்மலையில், கோவில் நிலத்தில் சாலை போடப்படுகிறது என்ற தகவல் வந்தவுடன், அந்த இடத்தில் மேற்கொண்டு பணி செய்யாமல் இருக்க, வருவாய் துறை சார்பில் வேலி போடப்பட்டது. அதேபோல், குத்தகைக்கு எடுத்தவர் விதிமீறலில் ஈடுபட்டதால், குத்தகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தோம். இது தொடர்பாக, அறநிலையத் துறை அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுத்து, எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், கலெக்டர் தலைமையில், அறநிலையத்துறை உயர் அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தப்படும். விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய, அந்தந்த துறைகளுக்கு மனு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனுவுக்கும் தீர்வு காணப்படும். - முரளி, தாம்பரம் கோட்டாச்சியர்.