/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சவுகார்பேட்டை நகை பட்டறையில் தீ விபத்து உரிமையாளர் பலி; ஊழியர்கள் 2 பேர் 'சீரியஸ்
/
சவுகார்பேட்டை நகை பட்டறையில் தீ விபத்து உரிமையாளர் பலி; ஊழியர்கள் 2 பேர் 'சீரியஸ்
சவுகார்பேட்டை நகை பட்டறையில் தீ விபத்து உரிமையாளர் பலி; ஊழியர்கள் 2 பேர் 'சீரியஸ்
சவுகார்பேட்டை நகை பட்டறையில் தீ விபத்து உரிமையாளர் பலி; ஊழியர்கள் 2 பேர் 'சீரியஸ்
ADDED : பிப் 27, 2026 05:34 AM

சவுகார்பேட்டை: நகைப் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த உரிமையாளர், பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஊழியர்கள் இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கட்டாவைச் சேர்ந்தவர் சுமன் பாக், 35. இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் மகள் உள்ளனர். இவர். வியாசர்பாடியில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். சவுகார்பேட்டை, எடப்பாளையம் சிங்கண்ணன் தெருவில் உள்ள அபுஜித் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தின் 4வது மாடியில், ஐந்து ஆண்டுகளாக நகை பட்டறை நடத்தி வருகிறார்.
இங்கு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராகேஷ், 26, அரவிந்த், 27, சிமந், 47, சூரஜ், 25, ஜாந்தோ, 40, ஆனந்த், 32, ஆகியோர் டிசைனர், நகை உருக்குதல், சமையல் என, மொத்தம் 10 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பட்டறையில் தங்கத்தை உருக்கவும், நகைகளை செய்யவும், பெரிய காஸ் சிலிண்டர் உள்ளது. அதிலிருந்து குழாய்கள் செல்கின்றன. நேற்று முன்தினம் இரவு, காஸ் கசிவு ஏற்பட்டு குழாய் வெடித்துச் சிதறியது.
இதில் கட்டடத்தின் கான்கிரீட் கூரை, பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தன. தொடர்ந்து, கடை முழுதும் தீப்பற்றி எரிந்தது.
தீயணைப்பு வீரர்கள், தீயில் சிக்கிய ஏழு பேரை மீட்டு '108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நகைப்பட்டறை உரிமையாளர் சுமன் பாக் உயிரிழந்தார். மேலும் சூரஜ், அரவிந்த் ஆகியோர், ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் நேற்று, யானைகவுனி போலீசார், தடயவியல் துறை, மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்கு பின், விபத்து குறித்து தெரியவரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், விபத்து ஏற்பட்ட கட்டடம், அதன் அருகில் உள்ள இரண்டு கட்டடங்களுக்கும், மாநகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.
அவசர சேவை வாகனங்கள்
வந்து செல்வதில் சிக்கல்
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
சவுகார்பேட்டை, எடப்பாளையம் பகுதி, தங்கம் உருக்குதல், நகைகள் செய்தல், தங்கத்தை சுத்திகரிப்பது, பிரித்தெடுத்தல் போன்றவைக்கு பெயர் போனது; 10,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அவர்கள் பட்டறையை தங்குமிடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். ஐந்து பேர் தங்க கூடிய வீட்டில், 10 பேர் உள்ளனர். தங்கத்தை சுத்திகரிக்க, 'காஸ் சிலிண்டர், நைட்ரஜன், அமிலம் போன்ற திரவங்களைப் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக, குடியிருப்பு கட்டடங்களில் முறையான உரிமம் பெறாமல், நகை பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், குறுகிய தெருக்களில் சீட்டுக்கட்டு அடுக்கியது போல வீடுகள் குடியிருப்புகள் உள்ளன.
நேற்று முன்தினம் நடந்த தீ விபத்தில், குடியிருப்பு கட்டடத்தின், நான்காவது மாடியில் இருந்து வெளியேறவும், தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்ல முடியாமல் திணறின.
இங்கு பயன்படுத்தும் அமிலங்கள் வெடிக்கும் தன்மை உடையவை. அதிலிருந்து வெளியேறும் புகையாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இந்த செயல்முறைக்கு உரிமம் அவசியம். ஆனால், பலரிடம் உரிமம் கிடையாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

