/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாமல்லையில் உணவு வீதி திட்டத்தில்... சர்ச்சை! ஓராண்டு குளறுபடியால் கைநழுவும் அபாயம்
/
மாமல்லையில் உணவு வீதி திட்டத்தில்... சர்ச்சை! ஓராண்டு குளறுபடியால் கைநழுவும் அபாயம்
மாமல்லையில் உணவு வீதி திட்டத்தில்... சர்ச்சை! ஓராண்டு குளறுபடியால் கைநழுவும் அபாயம்
மாமல்லையில் உணவு வீதி திட்டத்தில்... சர்ச்சை! ஓராண்டு குளறுபடியால் கைநழுவும் அபாயம்
ADDED : செப் 01, 2024 04:11 AM

மாமல்லபுரம் : மாமல்லபுரம் கடற்கரை பகுதியில், 1 கோடி ரூபாய் மதிப்பில் ஓராண்டிற்கு முன் திட்டமிடப்பட்ட, ஆரோக்கிய மற்றும் சுகாதார உணவு வீதி திட்டத்தில், நிர்வாக குளறுபடிகளால் சர்ச்சை நீடித்து வருகிறது. இதனால், திட்டப்பணி முடங்கியுள்ளது.
இந்தியாவில், பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், ஆன்மிக சிறப்பிடங்கள், இயற்கை சுற்றுச்சூழல் இடங்கள் என, வெவ்வேறு வகை சுற்றுலா பகுதிகள் நிறைந்துள்ளன. அத்தகைய பகுதிகளை காண, உள்நாடு, சர்வதேச பயணியர் அதிகளவில் குவிகின்றனர்.
தற்போது, சுற்றுலா பகுதிகளில் அதிகளவிலான பயணியர் குவிந்து வருகின்றனர். அத்தகைய பகுதிகளில், பயணியரின் முக்கிய தேவையாக உணவு உள்ளது.
ஆலோசனை
இந்திய மாநிலங்களின் பாரம்பரிய உணவு வகைகளை சுற்றுலா பயணியர் விரும்பி சாப்பிடுவர். ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த பகுதிக்கான பாரம்பரிய உணவு வகைகள் உண்டு.
ஆனால், பயணியருக்கு அளிக்கப்படும் உணவு, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரமின்றி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, சுற்றுலா பயணியரின் ஆரோக்கியத்தை காக்கும் வகையில், நாடு முழுதும் உள்ள 100 சுற்றுலா பகுதிகளில், ஆரோக்கிய மற்றும் சுகாதார உணவு வீதி திட்டத்தை செயல்படுத்த, கடந்தாண்டு மத்திய சுகாதார அமைச்சகம் முடிவெடுத்தது.
தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ், இதை உருவாக்க, இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம், வீட்டுவசதி, நகர்ப்புற அமைச்சகம் ஆகியவற்றிடம் ஆலோசனை பெறப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த உணவு பாதுகாப்புத்துறை வாயிலாக, 1 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் உணவக கடைகள், சுத்திகரிப்பு குடிநீர் வளாகம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். இதையடுத்து, மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் செயல்படுத்த, ஓராண்டிற்கு முன் திட்டமிடப்பட்டது.
மாற்றம்
இதற்கிடையே, கடற்கரை கோவில் அருகில், 'மத்திய அரசின் சுவதேஷ் தர்ஷன் - 2.0' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திலும், பயணியர் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இவ்வசதிகள் உணவு வீதி திட்டத்திலும் இடம்பெற்றதால், இவ்வீதி திட்டத்தை வேறிடத்தில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்பின், மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சியை கருதி, இப்பகுதிக்கே மீண்டும் மாற்றப்பட்டது. முதல்கட்ட நிதியாக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
பேரூராட்சி நிர்வாகம், 24.25 லட்சம் ரூபாய் மதிப்பில், கடற்கரை அருகில் சிமென்ட் கல் சாலை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகளை துவக்க இருந்தது.
ஆனால், திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக இடம் என்பதால், அந்த நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாததாக கூறப்படுகிறது.
சுற்றுலா வளர்ச்சிக் கழக இடத்தில், எவ்வித திட்டமும் செயல்படுத்த, பேரூராட்சி நிர்வாகத்தை அனுமதிக்க முடியாது என, சுற்றுலா வளர்ச்சி நிர்வாகம் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இச்சூழலில், சுற்றுலா வளர்ச்சிக் கழக வளாகத்தில், வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்துவது குறித்து, சப் - கலெக்டர் நாராயணசர்மா, கடந்த ஆக., 28ம் தேதி ஆய்வு செய்தார்.
தடை
பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள், உணவு வீதி திட்டத்திற்கு, சிமென்ட் கல் சாலை அமைக்க, டெண்டர் அளித்து, பணி துவக்கவுள்ள நிலையில், சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அனுமதிக்காததால், தடைபட்டுள்ளது என தெரிவித்தனர்.
இந்த குளறுபடிகளால், திட்டத்தை வேறிடத்திற்கு மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாநில அரசு துறையினர், முக்கிய திட்டங்களை தொல்லியல் மற்றும் சி.ஆர்.இசட்., எனப்படும் கடலோர ஒழுங்கமைவு மேலாண்மை விதிகளில் கவனமின்றி திட்டமிடுவது, அதன்பின் கைவிடுவது என, நிர்வாக குளறுபடி காரணமாக சர்ச்சை தொடர்கிறது.
இதுகுறித்து, சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர் கூறியதாவது:
முதலியார்குப்பம் சுற்றுலா வளர்ச்சி படகு குழாம் கடற்கரையில், நாங்கள் கட்டிய சாதாரண கழிப்பறை, சி.ஆர்.இசட்., விதிகள் காரணமாக இடிக்கப்பட்டது. இங்கும் கடற்கரை பகுதி என்பதால், எத்தகைய திட்டமாக இருப்பினும், சி.ஆர்.இசட்., அனுமதி பெற்றே செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.