/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சதுப்பு நிலம் அபகரிப்பு விசாரிக்க குழு அமைப்பு
/
சதுப்பு நிலம் அபகரிப்பு விசாரிக்க குழு அமைப்பு
ADDED : மார் 17, 2024 12:42 AM
சென்னை:பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், 20 ஏக்கர் நிலத்தை 'ஐ.ஜி - 3 இன்போ' என்ற நிறுவனத்துக்கு ஒதுக்கியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடவும், உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கோரி, கலாமின் அக்னி சிறகுகள் அறக்கட்டளை செயலர் செந்தில்குமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நிலத்தை அடமானம் வைத்து, வங்கியின் 1,350 கோடி ரூபாய் கடன் பெற முயற்சிப்பதால், தடை விதிக்கவும் கோரியிருந்தார்.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் முத்துக்குமார் ஆஜராகி, ''போலி ஆவணங்கள் தயாரிப்பில், பத்திரப்பதிவு துறை அல்லது வேறு எந்த துறையைச் சேர்ந்தவருக்கும் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய, விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
''பள்ளிக்கரணை சதுப்பு நிலம், சட்ட விரோதமாக யாருக்கும் மாற்றப்பட்டுள்ளதா; தனி நபருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதா என்பதையும், இந்த குழு கண்டறியும். மனுதாரரும், இந்தக் குழுவை அணுகலாம்,'' என்றார்.
இதையடுத்து, விசாரணைக்குழுவை மனுதாரர்கள் அணுகலாம் என்றும், தகுதி அடிப்படையில் அவர்களின் புகாரை, குழு பரிசீலிக்கும் என்றும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

