/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விநாயகர் சதுர்த்தி, தொடர் விடுமுறை 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
/
விநாயகர் சதுர்த்தி, தொடர் விடுமுறை 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
விநாயகர் சதுர்த்தி, தொடர் விடுமுறை 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
விநாயகர் சதுர்த்தி, தொடர் விடுமுறை 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ADDED : ஆக 27, 2025 12:21 AM

சென்னை, விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், ரயில்கள், பேருந்துகளில் பயணியர் கூட்டம் வழக்கத்தை விட, அதிகமாக இருந்தது.
விநாயகர் சதுர்த்தி, முகூர்த்தம், வார இறுதி என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால், நேற்று மாலை முதல் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது.
இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து விடுமுறை வருவதால், பயணியர் அதிகளவில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். பயணியர் வசதிக்காக, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, துாத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு 600க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பயணியர் வசதிக்காக, இன்றும் 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதேபோல், தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் அலைமோதியது. சிலர், படிகளில் அமர்ந்தபடி பயணம் செய்தனர்.
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து ரயில்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

