/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.35 கோடி சீன லேப்டாப்களுடன் துறைமுகத்தில் கன்டெய்னர் 'அபேஸ்' கையும் களவுமாக சிக்கிய 6 பேர் கும்பல்
/
ரூ.35 கோடி சீன லேப்டாப்களுடன் துறைமுகத்தில் கன்டெய்னர் 'அபேஸ்' கையும் களவுமாக சிக்கிய 6 பேர் கும்பல்
ரூ.35 கோடி சீன லேப்டாப்களுடன் துறைமுகத்தில் கன்டெய்னர் 'அபேஸ்' கையும் களவுமாக சிக்கிய 6 பேர் கும்பல்
ரூ.35 கோடி சீன லேப்டாப்களுடன் துறைமுகத்தில் கன்டெய்னர் 'அபேஸ்' கையும் களவுமாக சிக்கிய 6 பேர் கும்பல்
ADDED : செப் 21, 2024 12:26 AM

துறைமுகம், சென்னை, மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு சி.ஐ.டி.பி.எல்., எனும், 'சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் செயல்படுகிறது.
இந்நிறுவனம், சென்னை துறைமுக வளாகத்தில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சரக்குகளை கையாண்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, கன்டெய்னர் லாரிகள் வாயிலாக அனுப்பும் பணிகளை செய்கிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம், சீனாவில் இருந்து, 5,207 'டெல் நோட்புக்' ரக மடிக்கணினிகளை, இம்மாதம் 7ல் சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்துள்ளது.
மடிக்கணினிகள் அடங்கிய 40 அடி நீள கன்டெய்னர் பெட்டி, சி.ஐ.டி.பி.எல்., நிறுவன பணிமனையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பெங்களூரு நிறுவனம், அந்த கன்டெய்னர் பெட்டியை எடுத்து வர, இம்மாதம் 11ம் தேதி, 'டிரைலர்' லாரியை துறைமுகத்திற்கு அனுப்பியது.
அதன் லாரி ஓட்டுனர், சம்பந்தப்பட்ட பணிமனைக்கு சென்று பார்த்தபோது, அந்த கன்டெய்னரை காணவில்லை.
இது குறித்து அறிந்த பெங்களூரு நிறுவன அதிகாரிகள், சரக்குகளை கையாளும் சென்னை சி.ஐ.டி.பி.எல்., நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
இதையடுத்து 35 கோடி ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் அடங்கிய கன்டெய்னர் பெட்டி மாயமானதாக, சி.ஐ.டி.பி.எல்., நிறுவன மேலாளர் பொன் இசக்கியப்பன், துறைமுகம் போலீசில் 13ம் தேதி புகார் அளித்தார்.
இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், 'கன்டெய்னர் டிராக்கிங் ரிப்போர்ட்' பட்டியலை ஆய்வு செய்தனர். இதில், போலி ஆவணங்கள் அளித்து, 35 கோடி ரூபாய் மடிக்கணினிகள் அடங்கிய கன்டெய்னர் பெட்டியை, வேறொரு டிரைலர் லாரியில் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதற்கு உடந்தையாக, சி.ஐ.டி.பி.எல்., நிறுவன ஊழியர் இளவரசன் செயல்பட்டதும் தெரிந்தது.
இவர், கன்டெய்னரை வெளியே எடுத்துச் செல்ல, 'டாக்குமென்டேஷன் கிளியரன்ஸ்' என்ற சான்றை போலியாக தயாரித்து கொடுத்ததும் தெரியவந்தது. இந்த சான்றில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், நிறுவனம், சம்பந்தப்பட்டவரின் பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்கள் இருக்கும்.
இதில் தான் இளவரசன் குளறுபடி செய்துள்ளார். இதை வைத்தே துறைமுகம் காவல் ஆய்வாளர் சிலம்புசெல்வன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தவிர, கன்டெய்னர் பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த 'ஜிபிஎஸ்' எனும் இருப்பிடம் அறியும் கருவி வாயிலாகவும், கன்டெய்னர் இருப்பிடம் தெரிந்தது.
திருவள்ளூர், மணவாள நகரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அறிந்த போலீசார், அங்கு சென்று, மடிக்கணினிகள் அடங்கிய கன்டெய்னரை நேற்று மீட்டனர்.
போலீசார் அங்கு சென்றபோது, பெரிய கன்டெய்னரில் இருந்து 20 அடி நீளம் உடைய இரண்டு கன்டெய்னர்களுக்கு மாற்றும்போது, கையும் களவுமாக ஆறு பேர் பிடிபட்டனர்.
இத்திருட்டில் ஈடுபட்ட திருவள்ளூரைச் சேர்ந்த டிரைலர் லாரி உரிமையாளர் மணிகண்டன், 30, அதன் ஓட்டுனர் பால்ராஜ், 32, இடைத்தரகர்கள் திருவொற்றியூர் ராஜேஷ், 39, நெப்போலியன், 46, சிவபாலன், 45, திண்டுக்கல் முத்துராஜ், 46, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
விசாரணைக்கு பின், ஆறு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், போலி ஆவணங்கள் தயார் செய்து, கன்டெய்னர் பெட்டியை திருட உதவிய, இளவரசன் உள்ளிட்ட மூன்று பேரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.