/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெரினாவில் கடும் நெரிசல்: போலீசார் திணறல்
/
மெரினாவில் கடும் நெரிசல்: போலீசார் திணறல்
ADDED : ஜன 02, 2026 05:46 AM
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மெரினா கடற்கரைக்கு வந்தோரின் வாகனங்களால், காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீரமைக்க முடியாமல் போலீசார் திணறினர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சென்னையின் சுற்றுலா தலமான மெரினா கடற்கரைக்கு, பொழுதுபோக்குவதற்காக ஆயிரக்கணக்கானோர் நேற்று குவிந்தனர்.
அவர்களது இருசக்கர வாகனங்கள், மெரினா நீச்சல் குளம் அருகே உள்ளே நுழையவும், விவேகானந்தர் இல்லம் எதிரே வெளியேறவும், போக்குவரத்து போலீசார் அனுமதித்தனர். மாலையில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் திரண்டதால், அவற்றை நிறுத்த இடமின்றி, அவர்கள் தவித்தனர்.
இதனால் வாகனங்கள், மெரினாவிற்குள் நுழைய முடியாமல் காமராஜர் சாலையிலேயே அணிவகுத்து நின்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் சாந்தோமில் உள்ள சர்ச் பகுதியில் ஏராளமானோர், கார்களிலும், இருசக்கர வாகனங்களிலும் வந்தனர். அவர்களும், வாகனங்களை நிறுத்த இடமின்றி திக்குமுக்காடினர்.
தவிர, இந்த இரண்டு சாலைகளை இணைக்கும் பாரதி சாலை, வாலாஜா சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைகளிலும், கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் தவித்தனர். பல சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அவற்றை சீரமைக்க முடியாமல் போலீசார் திணறினர்.
இதுகுறித்து உதவி ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், 'நேற்று முன்தினம் இரவு, புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விடிய விடிய, போக்குவரத்து போலீசார் பணியாற்றியதால் ஓய்வு எடுப்பதற்காக சிலர் சென்றுவிட்டனர். இதனால் மாலையில் போக்குவரத்தை கவனிக்க ஆளில்லை. அதனால் வாகன நெரிசலை தீர்ப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டது' என்றார்.

