/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி ரேஸ் கிளப்பின் 118 ஏக்கர் நிலத்தில் பசுமை பூங்கா அமைக்க இடைக்கால தடை
/
கிண்டி ரேஸ் கிளப்பின் 118 ஏக்கர் நிலத்தில் பசுமை பூங்கா அமைக்க இடைக்கால தடை
கிண்டி ரேஸ் கிளப்பின் 118 ஏக்கர் நிலத்தில் பசுமை பூங்கா அமைக்க இடைக்கால தடை
கிண்டி ரேஸ் கிளப்பின் 118 ஏக்கர் நிலத்தில் பசுமை பூங்கா அமைக்க இடைக்கால தடை
ADDED : ஜூலை 16, 2025 12:16 AM
சென்னை,கிண்டி ரேஸ் கிளப்பில் உள்ள 118 ஏக்கரில், பசுமை பூங்கா உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், இடைக்கால தடை விதித்துள்ளது.
வேளச்சேரி ஏரியின் பரப்பளவு ஆக்கிரமிப்புகளால் குறைந்துள்ளது. கழிவுநீர் கலப்பு, குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏரி மாசடைவது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது. வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்க துணைத் தலைவர் குமரதாசனும் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், 'பசுமைப்பூங்கா அமைக்க, 118 ஏக்கர் நிலம் தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ரேஸ் கிளப் நிலத்தில், ஏன் ஏரி அமைக்கக்கூடாது என்பது குறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
கிண்டி ரேஸ் கிளப்பிலிருந்து, தமிழக அரசின் வருவாய் துறையால் மீட்கப்பட்ட, 118 ஏக்கர் நிலம், இப்போது தமிழக அரசிடம் உள்ளது. ஏற்கனவே இப்பகுதியில், சென்னை மாநகராட்சி, நான்கு குளங்களை தோண்டியுள்ளது.
இந்த 118 ஏக்கர் நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் திட்டம் இருப்பதாகவும், அதற்காக அதை தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிர்கள் துறையிடம் நிலத்தை, வருவாய்த்துறை ஒப்படைத்து உள்ளதாகவும், அரசு தரப்பில் கூறப்பட்டது.
'வருவாய்த்துறையோ அல்லது தோட்டக்கலை துறையோ, சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்காக நிலத்தை, தங்களிடம் முறையாக ஒப்படைக்கப்படவில்லை' என, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
எது எப்படியிருந்தாலும், தீர்ப்பாயத்தின் முந்தைய உத்தரவுகளின்படி, தமிழக அரசின் தலைமைச் செயலரிடமிருந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, கிண்டி ரேஸ் கிளப்பின் 118 ஏக்கர் நிலத்தில், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஆக., 21ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.