ADDED : நவ 09, 2025 04:21 AM
சென்னை:சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் 'எபிக்ஸ் காஷ், இப்போ பே' நிறுவனங்கள் இணைந்து, 'நம்ம சென்னை கார்டு' அறிமுகம் செய்துள்ளது.
'எபிக்ஸ் காஷ்' என்பது டிஜிட்டல் கட்டணங்கள், பயணம், நிதி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். 'இப்போ பே' எனும் தமிழகத்தைச் சேர்ந்த, யு.பி.ஐ., கட்டணச் சேவைகளை வழங்கும் ஒரு நிதி தொழில்நுட்ப நிறுவனமாகும்.
இந்த இரு நிறுவனங்களும், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைந்து, 'நம்ம சென்னை கார்டு' எனும் ஒருங்கிணைந்த முன்பணக் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை, பேருந்து, மெட்ரோ ரயில், வாகன நிறுத்தம் மற்றும் கடைகளில் பணம் செலுத்துதல் என பலவற்றிற்கும் பயன்படுத்தலாம். இதன் துவக்க விழா, கடந்த மாதம் கோவையில் நடந்தது.
இது குறித்து, எபிக்ஸ் காஷ் பேமென்ட்ஸ் பிரிவு தலைவர் தீபக் பாதியா கூறுகையில், ''நம்ம சென்னை கார்டு, எங்களது பயணத்தில், இது மேலும் ஒரு முக்கியமான படியாகும். 'இப்போ பே'யுடனான எங்களின் கூட்டமைப்பு, நாட்டின் வளர்ந்து வரும் நகரச் சூழலை வலுப்படுத்துவதோடு, எதிர்காலத்திற்கு தகுதியான கட்டண சூழலை உருவாக்கும்,'' என்றார்.
இது குறித்து, 'இப்போ பே' இணை நிறுவனர் மற்றும் தொழில்நுட்பத் தலைவர் ஜெய்குமார் கூறுகையில், ''சென்னை பயணியருக்கு எளிமை மற்றும் வசதியுடன் சேவை வழங்கும் இந்த முயற்சியில், எபிக்ஸ் காஷ் நிறுவனத்துடன் இணைவதில் பெருமை. 'நம்ம சென்னை கார்டு' வெறும் கட்டண கருவி அல்ல. இது மக்களின் தினசரி பயணம் மற்றும் டிஜிட்டல் கட்டண அனுபவத்தை மாற்றும் ஒரு முக்கிய முன்னேற்றம்,'' என்றார்.

