ADDED : ஜன 03, 2025 11:17 PM

'தக தக' என ஒலித்த சொற்கட்டுகளோடு, தன் நடன நிகழ்ச்சியை, நாட்டியக் கலைஞர் காமேஸ்வரி கணேஷ், நாரத கான சபாவில் நிகழ்த்தினார்.
'ஒற்றைப் பிறை சூடி சிவ சக்தி பாலனே, தவ முனிவர்களுக்கு அருளியவனே, பிரணவ பொருள் சொல்லியவனே, உன்னை தொழுகிற பாக்கியம் தர வேண்டும்' எனும் வகையில், காமேஸ்வரி நடனமாடினார்.
தொடர்ந்து தியாகராஜருடைய கீர்த்தனை. சுப்ரதீப ராகத்தில் ஆதி தாளத்தில் துவங்கியது. மயில் போல் அமர்ந்து நடனத்தை ஆரம்பிக்க, மயில் வாகனம் உடையவனே, மலர் போன்ற கண்ணுடையவனே, ஐந்து வகை அம்பு கொண்ட வில்லை ஏந்தியவனே என, முருகனை போற்றி துதித்தார்.
பின், வேலவனைப் போற்றி, அவனின் நினைப்பிலே மூழ்கி, காதலால் கசிந்துருகும் நாயகி, அவனது வருகையை நோக்கி காத்திருக்கும் வகையில், நீலாம்பரி ராக செந்தில் மேவும் தேவ பதவர்ணம் அமைந்திருந்தது.
அடக்கமான ஜதிகளில், கணக்குகளால் கோர்வை சேர்க்க, இலகுவாக நிருத்தியம் ஆடினார்.
திருச்செந்துாரின் கடலில் பத்மாசுரன் மரமாய் மாறி நிற்க, வேலவன் தன் வேல் கொண்டு இரண்டாய் பிளந்து, ஒரு பகுதியை சேவற் கொடியாகவும், மற்றொரு பகுதியை மயிலாகவும் ஆட்கொண்டதை, முதல் சஞ்சாரி ஆடினார் காமேஸ்வரி.
பின், 'உன்னை தவிர எனக்கு வேறு சிந்தனையில்லை. என்னுடைய உள்ளம் உனக்கு தெரியாதா' என, தன் காதலை நாயகி தெரிவிக்கும் விதமாக, முத்தாயிஸ்வரம் அடவு கோர்வைகள் அழகாய் ஆரம்பித்தன.
தொடர்ந்து, சூரஜாநந்தன் இயற்றிய பெஹாக் ராக தமிழ்ப்பாடல் அமைந்தது. முருகனின் வடிவழகை ஒவ்வொரு தெய்வங்களும் வர்ணித்ததை அழகாக விளக்க, முருகனின் மறுபெயர் அழகு எனும் விதத்தில் தன் பாவனையை அலங்கரித்தார்.
முருகனின் அழகில், சிரிப்பில் இயங்குகிறது இந்த உலகு என, பார்வையாளர்களை முருக பக்தியில் மூழ்கடித்தார் காமேஸ்வரி.
- மா.அன்புக்கரசி

