/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொளத்துார் வணிக வளாக பணி நிறுத்தம்
/
கொளத்துார் வணிக வளாக பணி நிறுத்தம்
ADDED : டிச 30, 2024 01:12 AM
சென்னை: கொளத்துாரில், 23 கோடி ரூபாயில் துவக்கப்பட்ட வணிக வளாகம் கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
கொளத்துாரில், 23 கோடி ரூபாயில் நவீன சந்தை என்ற பெயரில் வணிக வளாகம் கட்டும்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம் தொடர்பாக வழக்கு உள்ளது.
இங்கு அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்படுவதாக எழுந்த, புகார் தொடர்பாக உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், வழக்கில் உள்ள நிலத்தில், தடையை மீறி வணிக வளாகம் கட்டப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நம் நாளிதழில், கடந்த 27ம் தேதி செய்தி வெளியானது.
இது தொடர்பாக சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்ட விளக்க அறிக்கை:
கொளத்துார் பேப்பர் மில்ஸ் சாலையில், 10 கோடி ரூபாயில் வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டது. இடம் தேர்வு முடிந்த நிலையில், திட்ட மதிப்பீடு 23 கோடி ரூபாயானது.
கடந்த மார்ச், 7ல் இத்திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இதற்கு, 2023 செப்., 15ல் கோரப்பட்ட டெண்டர் அடிப்படையில், தேர்வான ஒப்பந்ததாரருக்கு, 2024 பிப்., 13ல் பணி ஆணை வழங்கப்பட்டது.
இதையடுத்து, 2024 மார்ச் 15ல் இத்திட்டத்துக்கு ஒப்புதல் கோரி விண்ணப்பிக்கப்பட்டது. ஏப்., 1ல் இந்த நிலத்தில் பணிகளை மேற்கொள்ள, சென்னை மாவட்ட நிர்வாகம் நுழைவு அனுமதி வழங்கியது.
கடந்த ஆக., 7ல் வணிக வளாக திட்டத்துக்கு, திட்ட அனுமதிக்கு பதிலாக, 'பிளானிங் கிளையரன்ஸ்' எனும் திட்ட இசைவு வழங்கப்பட்டது. ஆக., 16ல் சென்னை மாநகராட்சியும் பணி அனுமதி வழங்கியது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கட்டுமான பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலத்தின் உரிமை கோரி தனியார் சிலர் தொடர்ந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம், 2023 ஏப்., 13ல் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மேல் முறையீடு, 2024 பிப்., 5ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.