/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செலவின்றி ரயில்வே நிலத்தை பயன்படுத்த 'கும்டா' திட்டம்
/
செலவின்றி ரயில்வே நிலத்தை பயன்படுத்த 'கும்டா' திட்டம்
செலவின்றி ரயில்வே நிலத்தை பயன்படுத்த 'கும்டா' திட்டம்
செலவின்றி ரயில்வே நிலத்தை பயன்படுத்த 'கும்டா' திட்டம்
ADDED : அக் 30, 2025 03:53 AM
சென்னை: சென்னையில் போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டங்களை செயல்படுத்த, ரயில்வே துறையின் காலி நிலங்களை, செலவு ஏதுமின்றி நுழைவு அனுமதி அடிப்படையில் பெற, போக்குவரத்து குழுமமான 'கும்டா' திட்டமிட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில், மாநகர பேருந்து போன்ற பொது போக்குவரத்து சேவைகள் உள்ளன. இந்த சேவைகளை மேம்படுத்த, சம்பந்தப்பட்ட துறைகள் தனித்தனியாக திட்டங்களை செயல்படுத்துகின்றன.
இதில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதால், மக்கள் இந்த சேவைகளை தடையின்றி பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும். இதற்கான பல்வேறு திட்டங்களை கும்டா எனப்படும் போக்குவரத்து குழுமம் செயல்படுத்தி வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆணையம் நீண்டகால குத்தகை அடிப்படையில், இந்நிலங்களை பல்வேறு துறைகளுக்கும், தனியாருக்கும் வழங்கி வருகிறது.
இந்நிலையில், பொது போக்குவரத்து சேவைகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, பல்வேறு பகுதிகளில் வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
இதற்கான நிலத்தை குத்தகை அல்லது விலைக்கு வாங்கினால் அதிக செலவு ஏற்படும். எனவே, ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்தின் பயன்படுத்தாத நிலங்களை குத்தகை இன்றி, நுழைவு அனுமதி அடிப்படையில் பெற கும்டா திட்டமிட்டுள்ளது.
இதனால், நிலத்தின் உரிமையாளராக ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம் தொடரும். அதே நேரம், போக்குவரத்து சார்ந்த பணிகளுக்கு, அந்த நிலங்கள் பயன்படுத்தப்படும்.
இதுதொடர்பாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை வாயிலாக, ரயில்வே வாரியத்தை அணுக, 'கும்டா' அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

