போக்குவரத்து காவலரை தாக்கிய லோடு வாகன ஓட்டுநர் கைது
போக்குவரத்து காவலரை தாக்கிய லோடு வாகன ஓட்டுநர் கைது
ADDED : நவ 14, 2026 10:18 PM
சைதாப்பேட்டை: சைதாப்பேட்டையில், ‘யு – -டர்ன்’ செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், போக்குவரத்து காவலரை தாக்கிய, ஷாகுல், 32 என்ற லோடு வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சைதாப்பேட்டை போக்குவரத்து காவலர் பிரபாகரன், 34. நேற்று (நவ.,13) இரவு, சைதாப்பேட்டை சிக்னலில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த லோடு வாகன ஓட்டுநர் சைதாப்பேட்டையை சேர்ந்த ஷாகுல், சிக்னலில், ‘யு- – டர்ன்’ செய்ய முயன்றார். இதற்கு பிரபாகரன் அனுமதி மறுத்தார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த ஓட்டுநர், ஷாகுல் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஷாகுல், காவலர் பிரபாகரனின் சட்டையைப் பிடித்து கையால் தாக்கினார்.
இதுகுறித்து, பிரபாகரன் அளித்த புகாரின்பேரில், சைதாப்பேட்டை போலீசார், ஷாகுலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
