/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடன் மோசடி வழக்கு: தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு '5 ஆண்டு'
/
கடன் மோசடி வழக்கு: தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு '5 ஆண்டு'
கடன் மோசடி வழக்கு: தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு '5 ஆண்டு'
கடன் மோசடி வழக்கு: தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு '5 ஆண்டு'
ADDED : ஜன 01, 2026 04:35 AM
சென்னை: வங்கி கடன் மோசடி வழக்கில், தனியார் நிறுவன இயக்குநர்கள் நான்கு பேருக்கு, தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், வங்கி அதிகாரிகள் இருவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆந்திரா வங்கி மவுப்ரேஸ் சாலை கிளையில், கடந்த 1999 முதல் 2000ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், விதிகளை மீறி கோடிக்கணக்கில் கடன் வழங்கி மோசடி நடந்துள்ளது என, ஆந்திரா வங்கி சார்பில், சி.பி.ஐ.,யில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில், போலியான வெளிநாட்டு கொள்முதல் பில்கள் வாயிலாக கடன் வழங்கியதும், இதன் மூலம், வங்கிக்கு 5.76 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து, ஆந்திரா வங்கி மவுப்ரேஸ் சாலை கிளை தலைமை மேலாளர் பங்கஜா, மூத்த மேலாளர் எஸ்.வி.எஸ்.மூர்த்தி, ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் கிளை மூத்த மேலாளர் அர்ச்சனா, டி.என்.இன்டர்நேஷனல் லிமிடெட் இயக்குநர்கள் கேத்தன், முகேஷ், அஸ்வின், தலைவர் ரஷ்மிகாந்த் ஹிராலால்.
மேலும்,மதிப்பீட்டாளர் விலாஸ்.ஜே.பரதாபூர்கர், ஹாங்ஹாங்கில் உள்ள மெசர்ஸ் அராகி நிறுவன இயக்குநர் சஞ்சீவ் சந்திரகாந்த் உட்பட 11 பேர் மீது, மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், கடந்த 2002ம் ஆண்டில் சி.பி.ஐ., வழக்குபதிவு செய்தது.
வழக்கு விசாரணை, சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வங்கி, நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.பி.வடிவேலு முன் நடந்தது.
விசாரணையின்போது, வங்கி அதிகாரிகள் மூர்த்தி, மதிப்பீட்டாளர் விலாஸ்.ஜே.பரதாபூர்கர், தனியார் நிறுவன இயக்குநர் சஞ்சீவ் சந்திரகாந்த் ஆகியோர் உயிரிழந்ததால், அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது. மீதமுள்ள நபர்களின் மீதான வழக்கிற்கு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டி.என்.இன்டர்நேஷனல் லிமிடெட், அதன் இயக்குநர்கள் கேத்தன், முகேஷ், அஸ்வின், தலைவர் ரஷ்மிகாந்த் ஹிராலால் ஆகியோர், சென்னை, மும்பை போன்ற நகரங்களில், பல பொதுத்துறை வங்கிகளில், இதுபோல கடன்களை பெற்று மோசடி செய்ததில், 47 கோடி ரூபாய் வரை, அந்த வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
கடன்களுக்கு பிணையமாக வைத்த ஆவணங்களின் மதிப்பை, அதிகமாக காட்டியுள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
எனவே, அவர்களுக்கு தலா ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், அபராதமாக மொத்தம் 20 லட்சமும் விதிக்கப்படுகிறது.
இந்த அபராத தொகையை, ஆந்திரா வங்கிக்கு இழப்பீடாக செலுத்த வேண்டும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தலைமை மேலாளர் பங்கஜா, மூத்த மேலாளர் அர்ச்சனா, வினய் என்டர்பிரைசஸ் உரிமையாளர் வினய் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால், அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

