/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆலந்துாரில் அமைகிறது அரசு கலை கல்லுாரி இடத்தை பார்வையிட்டு அமைச்சர் ஆலோசனை
/
ஆலந்துாரில் அமைகிறது அரசு கலை கல்லுாரி இடத்தை பார்வையிட்டு அமைச்சர் ஆலோசனை
ஆலந்துாரில் அமைகிறது அரசு கலை கல்லுாரி இடத்தை பார்வையிட்டு அமைச்சர் ஆலோசனை
ஆலந்துாரில் அமைகிறது அரசு கலை கல்லுாரி இடத்தை பார்வையிட்டு அமைச்சர் ஆலோசனை
ADDED : ஏப் 24, 2025 12:19 AM

ஆலந்துார்,ஆலந்துார் தாலுகாவில், 8.22 லட்சம் பேர் வசிகின்றனர். சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட போது, ஆலந்துார் மண்டலம் உருவாக்கப்பட்டது.
இம்மண்டலத்தில், சென்னை வர்த்தக மையம், தென்சென்னை இணை கமிஷனர் அலுவலகம், மெட்ரோ, மின்சார ரயில் நிலையம், ராணுவ பயிற்சி மையம், தனியார் கல்லுாரிகள் அமைந்துள்ளன.
ஆனால், ஆலந்துார் தாலுகாவில் அரசு கல்லுாரி இல்லை. அங்கு, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவியர் பிளஸ் 2 முடித்து வெளியேறுகின்றனர். அவர்கள் உயர் கல்விக்காக, தனியார் கல்லுாரிகளையே நாட வேண்டியுள்ளது.
எனவே, ஆலந்துார் தாலுகாவில் அரசு கல்லுாரி அமைக்க வேண்டும் என, பல ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், ஆலந்துாரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இதற்கான இடம், ஆலந்துார் தாசில்தார் அலுவலகம் அருகில் இருந்த 47 சென்ட் நிலம், குத்தகை காலம் முடிந்தும் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 1.41 ஏக்கர் அரசு நிலம் என, 1.88 ஏக்கர் இடம், அரசு கல்லுாரிக்காக ஒதுக்கப்பட்டது.
அந்த இடத்தை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அன்பரசன், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், ஆலந்துார் மண்டல குழு தலைவர் சந்திரன் உள்ளிட்டோர் நேற்று, பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.
அந்த இடத்தில், விரைவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, கல்லுாரி வளாகம் கட்டப்பட உள்ளது. இருப்பினும், வரும் கல்வியாண்டே கல்லுாரி துவக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான மாணவ - மாணவியர் சேர்க்கை நடத்தப்பட்டு, தற்காலிகமாக ஆலந்துார், நேரு பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடத்தில், கல்லுாரி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

