/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக கிண்டியில் நவீன இதய அறுவை சிகிச்சை * இரண்டு பேருக்கு மறுவாழ்வு
/
அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக கிண்டியில் நவீன இதய அறுவை சிகிச்சை * இரண்டு பேருக்கு மறுவாழ்வு
அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக கிண்டியில் நவீன இதய அறுவை சிகிச்சை * இரண்டு பேருக்கு மறுவாழ்வு
அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக கிண்டியில் நவீன இதய அறுவை சிகிச்சை * இரண்டு பேருக்கு மறுவாழ்வு
ADDED : நவ 09, 2025 04:30 AM

சென்னை:கிண்டியில் உள்ள நுாற்றாண்டு அரசு மருத்துவமனையில், அப்பல்லோ இதய மருத்துவ நிபுணர் தீரஜ்ரெட்டி மற்றும் மருத்துவ குழுவினர், முதல்முறையாக நவீன முறையில், 'பைபாஸ்' அறுவை சிகிச்சை மேற்கொண்டு, இரண்டு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு மருத்துவமனையில், நெஞ்சுவலி காரணமாக, 50 வயது ஆண் ஒருவரும், 65 வயது பெண் ஒருவரும் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டனர். பரிசோதனையில், அவர்களுக்கு இதய ரத்த குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அப்பல்லோ மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் தீரஜ் ரெட்டி மற்றும் கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினரும் இணைந்து, இரண்டு நோயாளிகளுக்கும் நேற்று, வெற்றிகரமாக நவீன இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இது தொடர்பான கருத்தரங்கில், நவீன சிகிச்சை முறை குறித்து, டாக்டர் தீரஜ் ரெட்டி, மருத்துவ மாணவ, மாணவியருக்கு விபரித்தார். பின், அவர் கூறியதாவது:
பொதுவாக, இருதய ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு, காலில் உள்ள ரத்த குழாய் எடுத்து, 'பைபாஸ்' அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். நவீன முறையில், நோயாளியின் மார்பின் கீழ், வலது, இடது புறங்களில் தலா ஒரு ரத்தக்குழாய் எடுத்து, அடைப்பு ஏற்பட்ட குழாயை கடந்து, 'பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால், இதய ரத்த ஓட்டம் சீரானது. இந்த நவீன சிகிச்சை முறை, அரசு மருத்துவமனையில் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கிண்டி அரசு மருத்துவமனைய இதய அறுவைச் சிகிச்சை துறை தலைவர் கிருஷ்ணராஜா கூறுகையில், ''நவீன சிகிச்சை முறையால், நோயாளிகளின் ஆயுட்காலம், 25 ஆண்டுகள் வரை கூடும். இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொண்டால், 8 லட்சம் ரூபாய் வரையில் செலவாகும். இங்கு இலவசமாக செய்யப்பட்டு உள்ளது,'' என்றார்.
கருத்தரங்கில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் அமிர்த ராஜ், மருத்துவர் கவிதா மற்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்களும் பங்கேற்றனர்.

