/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இறைக்க, இறைக்க சூழ்ந்த மழைநீர்; 400க்கும் மேற்பட்ட இடத்தில் வெள்ளம்
/
இறைக்க, இறைக்க சூழ்ந்த மழைநீர்; 400க்கும் மேற்பட்ட இடத்தில் வெள்ளம்
இறைக்க, இறைக்க சூழ்ந்த மழைநீர்; 400க்கும் மேற்பட்ட இடத்தில் வெள்ளம்
இறைக்க, இறைக்க சூழ்ந்த மழைநீர்; 400க்கும் மேற்பட்ட இடத்தில் வெள்ளம்
UPDATED : அக் 16, 2024 01:32 AM
ADDED : அக் 16, 2024 12:20 AM

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், 400க்கும் மேற்பட்ட இடங்களில், மழைநீர் தேங்கியுள்ளது. 990 மோட்டார்கள் வைத்து நீரை உறிஞ்சினாலும், தொடர் மழை மற்றும் கூவம் ஆற்றில் நீர் மெதுவாக உள்வாங்குவதால், பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று முன்தினம், 4.6 செ.மீ., நேற்று மாலை வரை, 10.4 செ.மீ., மழை பெய்தது. இரண்டு நாட்களில், 15 செ.மீ., அளவு வரை மழை பெய்துள்ளது.
'சென்னையில் 15 செ.மீ., மழை பெய்தாலும், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது' என, அரசு தெரிவித்தது. ஆனாலும், எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பிறகும், 400க்கும் மேற்பட்ட இடங்களில், கால் முட்டி அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.
![]() |
இதற்கு, கூவம் ஆற்றில் நீர் உட்புகுந்து செல்லாதது பிரதான காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பிரதான வடிநிலப் பகுதியாக, கூவம், அடையாறு, பகிங்ஹாம், கொசஸ்தலை ஆறுகள் உள்ளன. இவற்றில் கூவம் ஆற்றில், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தால் கட்டுமான கழிவு கொட்டப்பட்டது. அவற்றை அகற்றுவதில் நீர்வளத்துறை, மாநகராட்சி அலட்சியம் காட்டின. பசுமை தீர்ப்பாய உத்தரவுக்குபின், அவசரம் அவசரமாக கூவம் ஆற்றில் கட்டட கழிவு அகற்றப்பட்டது.
ஆனால், அவை முழுமையாக அகற்றப்படவில்லை. நீரோட்டத்தை தடுக்க கூடிய பெரிய கற்கள் கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட நிலையில், கரையோரங்களில் இருந்த மேடுகள் மட்டுமே அகற்றப்பட்டன. இதனால், மழைநீர் வடிகாலில் இருந்து வெளியேறும் நீர், கூவம் மற்றும் அதன் கிளை கால்வாய்களில் உள்வாங்காமல், சாலையிலேயே தேங்குவதாக மாநராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
![]() |
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில், 19,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுழற்சி முறையில் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மண்டல மற்றும் வார்டு அளவிலும் புகார்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு ஏற்படுத்த, சுழற்சி முறையில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில், 990 மோட்டார்கள் அமைக்கப்பட்டு, நீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. ஆனால், தொடர்ந்து பெய்து வரும் மழையால், அப்பகுதியில் நீரை அகற்றுவது சவலாக உள்ளது. தாழ்வான பகுதிகளில், 89 இடங்களில் படகுகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 300 நிவாரண மையங்களில், பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் போதிய அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.
![]() |
மழைநீர் தேங்கிய ஒவ்வொரு இடத்திலும், சராசரியாக 1,500 பேருக்கு உணவுகள் வழங்கப்படுகிறது. இதற்காக, மாநகராட்சி 10 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.
கூவம் ஆற்றில் நீர் உள்வாங்குவது மெதுவாக உள்ளது. அதேபோல், முகத்துவாரங்களிலும் கடல் அலைகளால், மழைநீர் உள்வாங்குவதில் சிரமம் உள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால், மழைநீர் வடிகால் இருக்கும் பகுதிகளிலும், மழைநீர் தேங்கி வருகிறது. ஆனாலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தொடர்ந்து களத்தில் பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
![]() |
![]() |
![]() |
- நமது நிருபர் குழு -