மரணத்திலும் நிர்வாக சீர்கேடு நயினார் நாகேந்திரன் தாக்கு
மரணத்திலும் நிர்வாக சீர்கேடு நயினார் நாகேந்திரன் தாக்கு
UPDATED : அக் 26, 2026 10:09 PM
ADDED : அக் 26, 2026 10:06 PM
சென்னை: த.வெ.க., ஆட்சியில் மரணத்திலம் நிர்வாக சீர்கேடு தொடர்வதாக தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருமழிசை மின் மயானத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக, மறைந்த தந்தையின் உடலைத் தகனம் செய்ய முடியாமல், அவரது மகன் வினோத் பாரதி உள்ளிட்ட குடும்பத்தினர், இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக பரிதவித்து நின்ற சம்பவம், மிகுந்த வேதனையளிக்கிறது.
அதிகாரிகளுக்கும், மின் வாரியத்திற்கும் பலமுறை தகவல் தெரிவித்தும், எந்த உதவியும் கிடைக்காததால், இறுதியில், அந்த மகனே தன் சொந்தச் செலவில், ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து வந்து, தந்தைக்கு இறுதி மரியாதை செய்ய வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பது கொடுமையின் உச்சம்.
ஆனால் உண்மைக்கு மாற்றாக, ‘மின்வாரியமே உடனடியாக ஜெனரேட்டர் ஏற்பாடு செய்தது; ஊடகச் செய்திகள் தவறானவை’ என, அப்பட்டமான உண்மைக்கு புறம்பான தகவலை, அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
தன் துறையின் அலட்சியப் போக்கிற்கும், பொதுவெளியில் பரப்பிய தவறான தகவல்களுக்கும், அந்த குடும்பத்திடமும், தமிழக மக்களிடமும் உடனடியாக பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
