/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நத்தம் ஆக்கிரமிப்பாளருக்கு 3,228 சதுர அடிக்கு பட்டா.. அடிக்குது யோகம்! . சட்டசபை தேர்தல் நெருங்குவதால் அரசு தாராள முடிவு
/
நத்தம் ஆக்கிரமிப்பாளருக்கு 3,228 சதுர அடிக்கு பட்டா.. அடிக்குது யோகம்! . சட்டசபை தேர்தல் நெருங்குவதால் அரசு தாராள முடிவு
நத்தம் ஆக்கிரமிப்பாளருக்கு 3,228 சதுர அடிக்கு பட்டா.. அடிக்குது யோகம்! . சட்டசபை தேர்தல் நெருங்குவதால் அரசு தாராள முடிவு
நத்தம் ஆக்கிரமிப்பாளருக்கு 3,228 சதுர அடிக்கு பட்டா.. அடிக்குது யோகம்! . சட்டசபை தேர்தல் நெருங்குவதால் அரசு தாராள முடிவு
ADDED : நவ 05, 2025 11:36 PM

சென்னை முழுதும் கிராம நத்தத்தை ஆக்கிரமித்து வசிப்போருக்கு, எந்த கட்டணமும் இல்லாமல், 3,338 சதுர அடி வரை, இலவச வீட்டு மனை பட்டா வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்குவதை கவனத்தில் வைத்து, அரசு தாராளம் காட்டுகிறது. அடுத்த கட்டமாக, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், இந்த பாணியில் பட்டா வழங்க, வருவாய் துறையில் ஆலோசனை நடந்து வருகிறது.
விரிவாக்கத்திற்கு முந்தைய சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ள அயனாவரம், கிண்டி, கொளத்துார், அமைந்தகரை, மாம்பலம், பெரம்பூர், வேளச்சேரி ஆகிய ஏழு தாலுகாக்களில், 1978 முதல் 1999ம் ஆண்டு வரை, நகர நிலவரி திட்டத்தின்கீழ், மொத்த இடங்களையும் அளந்து பட்டா வழங்கப்பட்டது.
தனியார் பட்டா பெற்ற நிலையில், அரசு இடமான நந்தம் வகைப்பாட்டில் வசித்த, 15,000க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்படவில்லை. இவர்களின் கோரிக்கையால், 2012ம் ஆண்டு, கையால் எழுதப்பட்ட பட்டா வழங்கப்பட்டது. இருந்தும், பத்திரப்பதிவு செய்ய முடியாததுடன், அனுமதி பெற்று கட்டடம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், நந்தம் வகைப்பாடு இடத்தில் வசிப்போருக்கு, ஆன்லைன் பட்டா வழங்க அரசு முடிவு செய்தது. இந்த வகையில், விரிவாக்கத்திற்கு முந்தைய மாநகராட்சி எல்லையில் உள்ள ஏழு தாலுகாக்களுக்கு, ஆன்லைன் பட்டா வழங்கப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சியுடன், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் பல பகுதிகள் இணைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது.
விரிவாக்கத்திற்கு பிந்தைய எல்லையான ஆலந்துார், அம்பத்துார், திருவொற்றியூர், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லுார் தாலுகாக்களில், நகர நிலவரி திட்ட பணிகள் முடிந்த கிராமங்களுக்கு, ஆன்லைன் பட்டா வழங்கப்பட உள்ளது.
இந்த வகையில், சென்னை மாவட்டத்தில், 30,000க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதற்காக, தனி தாசில்தார்கள் நியமித்து பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நகர நிலவரி திட்ட பணிகள் முடிந்த 46 கிராமங்களில், நந்தம் வகைப்பாட்டில் வசிப்போருக்கு ஆன்லைன் பட்டா வழங்கப்படும். இதற்காக, கையால் எழுதி தரப்பட்ட பட்டா வைத்திருப்போர் வீடுகளுக்கு சென்று, இடத்தை அளந்து, அவர்களின் முழுமையான விபரம் பெற்று, ஆவணங்கள் சரி பார்த்து, நோட்டீஸ் வழங்கப்படும்.
நோட்டீஸ் பெற்ற சில நாட்களுக்குள், நகர நிலவரி திட்ட தாசில்தார் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். முழு இடம் அல்லது பிரித்து விற்பனை செய்தார்களா; வணிக கட்டடம் கட்டி உள்ளனரா என, விசாரணை நடக்கும்.
ஆவணங்கள் சரியாக இருந்தால், 3,228 சதுர அடி வரையிலான நிலத்திற்கு ஆன்லைன் பட்டா வழங்கப்படும். மீதமுள்ள கிராமங்களில், நந்தம் இடத்தில் வசிப்போருக்கு, நகர நிலவரி திட்ட பணிகள் முடிந்த பின் பட்டா வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை மாநகராட்சியில், நந்தம் நிலத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதை தொடர்ந்து, சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், இதே பாணியில் வீட்டு மனை பட்டா வழங்க, அரசு ஆலோசித்து வருகிறது என, வருவாய் துறை அதிகாரிகள் கூறினர்.
இதற்கு முன், ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வசித்தோருக்கு, அதிகபட்சம் 2 சென்ட் நிலம், அதாவது 870 சதுர அடி வரை, இலவச வீட்டு மனை பட்டா தரப்பட்டது. கூடுதலாக 1 சென்ட் இடத்திற்கு, சந்தை விலையில், 25 சதவீதம் வசூலிக்கப்பட்டது.
- நமது நிருபர் -

