/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிவுடையம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்
/
வடிவுடையம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்
ADDED : செப் 25, 2025 12:38 AM

திருவொற்றியூர்:திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், நவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவிலில், புரட்டாசி மாத நவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு, கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக, உற்வச தாயார் தபசு அலங்காரத்தில், சன்னிதியின் மைய மண்டபத்தில் எழுந்தருளினார். பின், கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, யாகம் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.
நிறைவாக, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, கலசங்கள் புறப்பாடாகின. அப்போது, கொடிமரம் அருகே, சூலம், தபசு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவ அம்மனை கொலுவிருக்க செய்தனர்.
பின், வேத மந்திரங்கள், கயிலாய வாத்தியங்கள் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவ தாயார் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார்.
விழா நாட்களில், பராசக்தி, நந்தினி, கவுரி, பத்மாவதி, உமா மகேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, மஹிஷா சூர மர்த்தினி, சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, மாடவீதி உற்சவம் காண்பார்.
அக்., 2ம் தேதி, சந்திர சேகர பாரிவேட்டை, தியாகராஜ சுவாமி மாடவீதி உத்சவம், மீனாட்சி அலங்காரத்தில் தாயார் எழுந்தருளல், கொடியிறக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன், நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது.