/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
60 சவரன் நகை திருடி தலைமறைவான நேபாள தம்பதி அண்ணா நகரில் கைது
/
60 சவரன் நகை திருடி தலைமறைவான நேபாள தம்பதி அண்ணா நகரில் கைது
60 சவரன் நகை திருடி தலைமறைவான நேபாள தம்பதி அண்ணா நகரில் கைது
60 சவரன் நகை திருடி தலைமறைவான நேபாள தம்பதி அண்ணா நகரில் கைது
ADDED : மே 21, 2025 12:56 AM

நீலாங்கரை :கொட்டிவாக்கம், லட்சுமண பெருமாள் நகரை சேர்ந்தவர் மகேஷ்குமார், 60. குடும்பத்துடன் வசிக்கிறார்.
இவர், வீட்டு வேலை செய்யவும், பாதுகாப்புக்காகவும், ஒன்றரை மாதத்திற்கு முன், நேபாள நாட்டை சேர்ந்த ரமேஷ்மனசாகி, 22, அவரது மனைவி பினிதாசாகி, 21, ஆகியோரை வேலைக்கு சேர்த்துள்ளார்.
கடந்த 14ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் என்ற ஊரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு, குடும்பத்துடன் சென்ற மகேஷ்குமார், அன்று இரவு வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அவர், உள்ளே சென்று பார்த்தார். அங்கு, பீரோவில் இருந்து 60 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 50,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது.
நீலாங்கரை போலீசார் விசாரணையில், ரமேஷ்மனசாகி, பினிதாசாகி ஆகியோர் கொள்ளையடித்தது தெரிந்தது.
உடனே, தனிப்படை போலீசார், விமான நிலையம், ரயில், பேருந்து நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தேடி வந்தனர்.
அவர்களின் மொபைல் போன் எண்களை கண்காணித்தபோது, அண்ணா நகர், சாந்தி காலனியில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருப்பது தெரிந்தது.
நேற்று, சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல காத்திருந்த இருவரையும், போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து, 65 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விசாரணைக்கு பின், போலீசார் கூறியதாவது:
நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட இருவரும், பெங்களூரு முகவரியில் ஆதார் அட்டை வைத்துள்ளனர்.
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில், பெரிய பங்களாக்களில் பணிக்கு சேர்ந்து, வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து, நகை, பணத்தை திருடி நேபாளத்திற்கு தப்பி சென்றுவிடுவர்.
சில நாட்களுக்கு பின் மீண்டும் வந்து, அதே பாணியில் மீண்டும் கைவரிசை காட்டுவர். இவர்கள், திருடிய உடனே நேபாளம் செல்வதில்லை.
அவர்கள் நாட்டை சேர்ந்தவர்கள் வீடுகளில் தங்கி இருந்துவிட்டு, நான்கு, ஐந்து நாட்களுக்கு பின் தான் நேபாளம் செல்வர்.
நேற்று, அண்ணா நகரில் இருந்து புறப்பட்ட போது, இருவரும் சிக்கினர். இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நபர்களை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.