/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் தேங்கும் 87 இடங்களில் மாற்றுப்பாதையில் புதிய வடிகால்வாய்
/
மழைநீர் தேங்கும் 87 இடங்களில் மாற்றுப்பாதையில் புதிய வடிகால்வாய்
மழைநீர் தேங்கும் 87 இடங்களில் மாற்றுப்பாதையில் புதிய வடிகால்வாய்
மழைநீர் தேங்கும் 87 இடங்களில் மாற்றுப்பாதையில் புதிய வடிகால்வாய்
ADDED : ஜூலை 22, 2025 12:34 AM
சென்னை, மழைநீர் அதிகம் தேங்கி அகற்றுவதற்கு பல நாட்களான 87 இடங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க, மாற்றுப்பாதையில் புதிய வடிகால்வாய்களை, மாநகராட்சி அமைத்து வருகிறது.
சென்னையில் பரவலாக மழைநீர் வடிகால்வாய் கட்டமைப்பு இருந்தாலும், சில இடங்களில் தொடர்ச்சியாக மழைநீர் தேக்கம் உள்ளது. குறிப்பாக, குறிப்பிட்ட இடங்களில், தொடர்ச்சியாக ஓரிரு நாட்கள் வரை மழைநீர் அகற்ற முடியாத சூழல் உள்ளது.
இவற்றிற்கு தீர்வு காணும் வகையில், மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கடந்த கால அனுபவங்களின்படி, நீண்ட நாட்கள் மழைநீர் தேங்கக்கூடியவையாக, 87 இடங்களை மாநகராட்சி அடையாளப்படுத்தி உள்ளது.
இங்கு, வரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு, புதிய வடிகால்வாய்கள் மற்றும் மாற்றுப்பாதையிலான வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில், 44 பெரிய கால்வாய்கள், சுழற்சி முறையில் துார்வாரும் பணி நடந்து வருகிறது. மேலும், 3,000 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றில், 1,034 கி.மீ., நீளத்திற்கு துார்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
கடந்த ஆண்டு மழைக்கால ஆய்வின்படி, 87 இடங்களில் மழைநீர் தேங்குவது அடையாளம் காணப்பட்டு, அங்கு புதிதாக வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் ஏற்கனவே மழைநீர் வடிகால்வாய் இருந்தாலும், அங்கு மழைநீர் தேங்கியதற்கு, பிரதான கால்வாய் மூலம் நீர்நிலைகளில் மழைநீர் செல்லாதது போன்ற காரணங்கள் உள்ளன.
எனவே, மற்றொரு தெரு வாயிலாகவும் மழைநீர் வெளியேற்றும் வகையில், மாற்றுப்பாதையிலான வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தவிர, மழைநீர் வெளியேற்றுவதற்காக மின்மோட்டாரும் அமைக்கப்பட உள்ளது.
ஏற்கனவே உள்ள கால்வாய்களில், 600 இடங்களில் சேதமடைந்தது சீரமைக்கப்பட்டு உள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீரைத் தேக்கும் வகையில், 201 குளங்கள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னையில் மொத்தம், 489.22 கோடி ரூபாய் மதிப்பில், 650.90 கி.மீ., நீளத்துக்கு, 3,987 சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில், 991 சாலைகள் என, 25 சதவீத சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சாலைகளை வரும் செப்., மாதத்திற்குள் முடிக்க ஒப்பந்ததாரருக்கு, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.