ADDED : ஆக 31, 2025 03:21 AM
வங்கி ஊழியரின் பைக் திருட்டு
புளியந்தோப்பு, கோவிந்த்சிங் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 34; தனியார் வங்கி ஊழியர். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த இவர், கதவை திறந்து வைத்தே துாங்கியுள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, படுக்கை அறையில் வைத்திருந்த மொபைல் போன் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த 'ஹோண்டா ஷைன்' பைக் திருட்டு போயின.
பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் 'அபேஸ்'
திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கிருத்திகா, 26. நேற்று முன்தினம் இரவு பாடி அருகே நடந்த சகோதரரின் திருமண நிகழ்ச்சிக்கு, குடும்பத்துடன் சென்றார். அங்கு உறவினர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். பின், தான் எடுத்துவந்த, 3 லட்சம் ரூபாய் அடங்கிய பையை பார்த்தார். அதில், ஒன்றரை லட்சம் ரூபாய் திருடுபோனது தெரியவந்தது. திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்
பீரோவில் இருந்த நகைகள் மாயம்
ஜெ.ஜெ நகர், பாடி புதுநகரைச் சேர்ந்தவர் சந்தோஷ், 32. இவர், நேற்று முன்தினம், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு நகை அணிந்து செல்ல, பீரோவை திறந்தபோது 2.5 சவரன் நகைகள் மாயமாகி இருந்தன.ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வீடு புகுந்து பெண்ணிடம் செயின் பறிப்பு
செங்கல்பட்டு மாவட்டம், அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 30. நேற்று அதிகாலை 1:30 மணியளவில், இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், தமிழ்ச்செல்வனின் தாய் கலைச்செல்வி, 60, கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்து தப்பிச் சென்றனர். மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருத்தணி கோவிலுக்கு வாகனத்திற்கு தடை
திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை சேதமடைந்து உள்ளதால், சீரமைக்கும் பணி நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது.
இதனால், நாளை கோவில் பேருந்து மட்டும் இயக்கப்படும். நாளை மறுநாள் கோவில் பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

